குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஓவைசிக்கு எதிராக இஸ்லாமியர்கள் கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 -ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 – ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அண்மையில் அறிவித்து இருந்தார். இதையடுத்து, அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பது குஜராத். இம்மாநிலத்தில், முதல்வராக இருப்பவர் புபேந்திர படேல். இம்மாநிலத்தில், வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பல்வேறு உதிரி கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளன. அதே சமயத்தில், பா.ஜ.க.வும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் தேர்தல் களம் தற்போது உஷ்ணமடைந்து இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் குஜராத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இம்மாநிலத்தில், 5 முறை தொடர்ச்சியாக பா.ஜ.க.வே ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் 6-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. அதே வேளையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் பஞ்சாப் போலவே குஜராத் தேர்தலிலும் சரித்திரம் படைப்போம் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறி வருகிறார். கடந்த, 2017 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 99 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் அசாதுதின் ஓவைசி. இவரது, கட்சியான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தே ஹாதுல் முஸ்லிமீன் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. அந்தவகையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அவர் குஜராத் மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். இதையடுத்து, பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேச முற்படுகையில், கூட்டத்தில் இருந்த இஸ்லாமியர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மோடி மோடி என கோஷம் எழுப்பியதோடு, ஓவைசிக்கு கறுப்பு கொடியை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.