சச்சின் நவம்பர் 15 சொல்லும் பாடம்!! | Sachin Tendulkar

சச்சின் நவம்பர் 15 சொல்லும் பாடம்!! | Sachin Tendulkar

Share it if you like it

சச்சின் டெண்டுல்கர் – 15 நவம்பர் சொல்லும் பாடம்

நவம்பர் 15 – இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் – குறிப்பாக இந்திய ரசிகர்கள் – மறக்க முடியாத நாளாக இருக்கும். சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்பு, 15 நவம்பர் 1989 அன்று மாஸ்டர் ப்ளாஸ்டர் என்று பின்னாளில் உலகமே போற்றும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாகக் களமிறங்கிய தினம்.


இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமான வாழ்க்கைப் பாடம் இதில் இருக்கின்றது. வாழ்க்கை என்பது நாம் நினைத்தபடியெல்லாம் அமைவதில்லை, ஆனால் அமைகின்ற வாழ்க்கையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதுதான் பாடம்.


இன்றைக்கு எல்லோரும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைய வேண்டும், பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா? அவ்வாறு நடக்காவிட்டால் துவண்டு விடலாமா?


அன்றைய போட்டியைப் பார்ப்போம். சர்வதேசப் போட்டியில் நுழைவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் விளையாடிய ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பை ஆகிய மூன்று போட்டிகளிலும் முதன் முறை விளையாடும்போதே சதம் அடித்தவர். இதனால் இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது உண்மை.

சர்வதேசப் போட்டியில் விளையாட ஆரம்பித்தபோது சச்சினுக்கு வெறும் 16 வயதுதான். முதல் போட்டியே எங்கு தெரியுமா? கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நமக்குப் பரம எதிரியாக விளங்கும் பாக்கிஸ்தானின் கராச்சியில். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடும்போது அங்கே இந்திய ரசிகர்களும் இருப்பார்கள், அது போக அங்கே இருக்கும் உள்ளூர் ரசிகர்களும் இந்திய வீரர்களை ஆதரிப்பார்கள். ரசிகர்களின் ஆதரவு என்பது ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஊட்டச்சத்து பானம் போன்றது. ஆனால் பாக்கிஸ்தானின் இந்திய வீரர்களை ஆதரிப்பதற்கு ஒரே ஒரு ரசிகர் கூட இருக்க மாட்டார்கள். அப்படி யாராவது ஆதரித்தால் அதற்குப் பிறகு அந்த ரசிகரே இருக்க மாட்டார் என்பதுதான் நிலை.


இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் தனது முதல் சர்வதேசப் போட்டியை சந்திக்கிறார் சச்சின். பாக்கிஸ்தான் அணியில் உலகப் புகழ் பெற்ற வீரர்களான இம்ராந் கான், வாசிம் அக்ரம், இவர்களுடன் பின்னாளில் வேகப்பந்து வீச்சில் புகழ்பெறப் போகும் வக்கார் யூனிஸ். முதல் இன்னிங்க்ஸில் முதலில் பேட் செய்த பாக்கிஸ்தான் அணி 409 ரன்களைக் குவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸைத் துவக்கிய இந்திய அணி துவக்கத்திலேயே மிகப்பெரிய சரிவை சந்திதது. 41 ரன்களைக் குவிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஆறாவது வீரராகக் களமிறங்குகிறார் சச்சின் டெண்டுல்கர். சுற்றிலும் விரோத சூழல். வேகப்பந்து வீச்சு மிரட்டுகிறது.


இதற்கு முன்பு நடந்த ஒரு பயிற்சிப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் அப்துல் காதிர் என்னுடைய பந்தை அடிக்க முடியுமா என்று சீண்டுகிறார் சச்சினை. அந்த ஒரு ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்களை அடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஆகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பும் சாதிக்க வேண்டும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் சிறுவனான சச்சினுக்கு இருந்தது. வாசிம் அக்ரம் பந்து வீசுகிறார். தனது வேகப்பந்துகளால் சிறுவனை மிரட்டுகிறார். பௌன்ஸராக வருகிறது பந்து. கொஞ்சம் திணறுகிறார் சச்சின். பௌன்ஸரைத் தொடர்ந்து யார்க்கர் பந்து வரும் என்று எதிர்பார்க்கிறார் சச்சின். ஆனால் தொடர்ந்து பௌன்ஸர், ஷார்ட் பால் என்று மிரட்டுகிறார் வாசிம் அக்ரம். அப்போதுதான் சர்வதேசப் போட்டிகள் என்பது நாம் எதிர்பார்ப்பது போல் அமையாது என்ற பெரிய தத்துவத்தைப் புரிந்து கொள்கிறான் சிறுவன் சச்சின்.


இது இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். பள்ளி, கல்லூரி காலங்களில் வீட்டினரின், பெற்றோரின் உதவி எப்போதும் இருக்கும். எந்தப் பிரச்சினை என்றாலும் அவர்களை நாடலாம். ஆனால் ஒரு இளைஞன் தலையெடுத்தபின் தனக்கென ஒரு வேலை, தொழில் அல்லது வியாபாரம் என்று தேடிக் கொண்ட பிறகு வெளி உலகத்தைத் தனியாகத்தான் சந்திக்க வேண்டும். உற்றார் உறவினரின் ஆதரவு தொடர்ந்து இருக்குமென்றாலும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும், உடனடியாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தாமதத்துக்கு இடமில்லை. இதுவரை மாணவனாக இருந்த போது நிலவிய சூழல் வேறு, இப்போது நிலவும் சூழல் வேறு. இந்த உலகம் என்பது எப்போதும் நம்மைக் கடித்துக் குதறத் துடிக்கும் ஓநாய்களைக் கொண்டது. உதவி வரும் என்று காத்துக் கொண்டிருந்தால் அதற்குள் நம்மைக் கூறு போட்டு விடும் ஓநாய்கள். ஆகவே நமக்கு நாமே என்பதை இங்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.


இதையேதான் சச்சின் டெண்டுல்கரும் செய்தார். மிரட்டும் பந்து வீச்சைக் கண்டு மிரளாமல் சுதாகரித்துக் கொண்டு 15 ரன்கள் எடுத்தார் தனது முதல் போட்டியில். மொஹம்மத் அஸாருதீனுடனான 32 ரன்கள் கூட்டு சரிந்து கொண்டிருந்த ஆட்டத்தைத் தடுத்த நிறுத்த பெரிய உதவியாக இருந்தது. அந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸில் 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடர்ந்த பாக்கிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 305 ரன் எடுத்து தனது ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி, சஞ்சய் மஞ்ச்ரேகரின் 113 மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவின் 85 ரன் குவிப்பால் தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை ட்ரா செய்தது.


அந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் எடுத்த ரன்கள் மொத்தமே 200. இதுவரை தேசிய அளவில் நடந்த போட்டிகளில் சரமாரியாக ரன் குவித்து செஞ்சுரி அடித்து தனக்கென புகழைத் தேடிக்கொண்ட சிறுவன், முதன்முறையாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும்போது அந்த அளவு சோபிக்க முடியவில்லை. ஆனால் இதனால் நாம் சர்வதேசைப்போட்டிகளில் விளையாட முடியாதோ என்ற அவநம்பிக்கை வரவில்லை சச்சினிடம். ஒருவேளை அப்படி ஒரு அவநம்பிக்கை வந்திருந்தால் 100 செஞ்சுரிகளைக் குவித்த வீரர் என்று இன்றளவும் யாரும் தொட முடியாத ஒரு சாதனையை அந்தச் சிறுவனால் நிகழ்த்தியிருக்க முடியுமா? மாஸ்டர் ப்ளாஸ்டர் என்ற பெருமையை அடைந்திருக்க முடியுமா? சர்வதேச கிரிக்கெட்கமிட்டியின் புகழ்பெற்றவர்களின் வரிசையில் ஆறாவது இந்தியனாக இடம் பிடித்திருக்க முடியுமா?
இதுதான் சச்சின் நமக்கு சொல்லும் பாடம். முதல் முயற்சியிலேயே பெரிதாக சாதிக்க முடியவில்லையே என்று மனம் சோர்ந்து விட்டால் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதையே அடைய முடியாது. வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு படியும் சோதனைகள் நிறைந்தது. அந்த சோதனைகள் எல்லாவற்றையுமே வெற்றிகரமாக முறியடித்து சாதனையாக்குவது என்பது சாத்தியமாகாது. சில சமயங்கள் தோல்வியும் அடையலாம். ஆனால் பயணம் செய்ய வேண்டிய தூரம் இன்னமும் உள்ளது என்பதை உணர்ந்து தோல்விகளைப் புறம்தள்ளினால் நாம் எல்லோருமே ஒரு மாஸ்டர் ப்ளாஸ்டர் ஆகலாம்.


Share it if you like it