ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக தனது கான்வாயை நிறுத்தச் சொல்லி வழிவிட்ட பாரத பிரதமர் மோடியின் செயல் பல்வேறு தரப்பினராலும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக நேற்று சென்றிருந்தார். அதன்படி, காந்திநகர் – மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அகமதாபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்றார் பிரதமர் மோடி.
அப்போது, ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் அடித்தபடி பின்னால் வந்தது. இதைக் கண்ட மோடி, கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுமாறு உதவியாளரிடம் கூறியிருக்கிறார். அதன்படி, பிரதமரின் கான்வாய் சாலையோரம் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பிறகு, பிரதமரின் கான்வாய் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்த காணொளியை குஜராத் மாநில பா.ஜ.க., தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, பிரதமரின் இத்தகைய செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல, காந்திநகர் – மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காந்திநகரிலிருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் மேற்கொண்டார். அப்போது, ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தன்னுடன் பயணித்த சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் உரையாடினார். மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளையும், இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.