ஒரு சின்ன குழந்தையை போட்டு அடியோ அடி என்று அடிக்கிறார்கள் – உதயநிதிக்கு வக்காலத்து வாங்கும் கமலஹாசன்

ஒரு சின்ன குழந்தையை போட்டு அடியோ அடி என்று அடிக்கிறார்கள் – உதயநிதிக்கு வக்காலத்து வாங்கும் கமலஹாசன்

Share it if you like it

சமீபத்தில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மத துவேஷ மாநாடு ஒன்று உள் அரங்க நிகழ்வாக சென்னையில் நடந்தது . இந்த மாநாட்டில் தமிழகத்தின் மாநில அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருப்பவரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மேடையிலேயே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பகிரங்கமாக பேசியிருந்தார். இவரது கருத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தன் நிலையில் உறுதியாக சனாதனத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆட்சி போனாலும் பரவாயில்லை. சனாதான ஒழிப்பு தான் முக்கியம். திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதே சனாதன அழிப்பிற்கு தான் என்று பேசியிருந்தார்.

இந்த விழாவில் மற்றொரு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்றதும் உதயநிதியின் இந்த பேச்சுக்களை எல்லாம் அவர் கண்டிக்காமல் ஆதரித்து தட்டிக் கொடுத்ததும் தமிழகத்தில் சனாதனிகள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் நாடு முழுவதும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளான நிலையில் முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் பலரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த சனாதன ஒழிப்பு மாநாடு பற்றியும் அது மாநில அரசின் ஆதரவோடு நடந்ததும் அதில் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பங்கேற்று வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்கும் புகார் மனுக்களை அனுப்பி வைத்தார்கள். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குகளும் பதிவானது . எதிர்ப்பு போராட்டங்களும் அரங்கேறியது .திமுக சார்ந்து இருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்தே இதற்கு பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தது.

தற்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது . விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு போன நிலையில் இதுவரையில் அமைதி காத்தவர்கள் எல்லாம் உதயநிதிக்கு வக்காலத்து வாங்க களம் இறங்குகிறார்கள்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் திரைப்பட நடிகருமான கமலஹாசன் சனாதன ஒழிப்பு பேச்சு என்ற ஒற்றைக் காரணம் வைத்து உதயநிதி என்ற ஒன்றும் அறியா ஒரு சிறு குழந்தையை போட்டு எல்லோரும் அடியோ அடி என்று அடிக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுகிறது என்று உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வரும் கண்டனங்கள் வழக்குகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து உதயநிதிக்கு பாதுகாப்பு அரணாக தனது கருத்தை பொதுவெளியில் பதிவு செய்திருக்கிறார்.

தனி மனிதர்களாக கமலஹாசனுக்கோ உதயநிதிக்கோ எந்த ஒரு மதத்தை பற்றியும் ஆதரவு விருப்பம் இருக்கலாம். எந்த ஒரு மதத்திற்கும் எதிரான தனிப்பட்ட கருத்துக்கள் நிலைப்பாடுகள் இருக்கலாம் . அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். தனி மனித சுதந்திரம் .அதை யாரும் இங்கு கேள்வி எழுப்பப் போவதில்லை . ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு பொதுவெளியில் ஒரு அமைப்பு ஒரு கட்சி என்று நிறுவும் போது எந்த ஒரு அமைப்பிற்கும் கட்சிக்கும் ஏதோ ஒரு சித்தாந்தம் மதம் என்ற வகையில் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முடியும். அது அவர்களின் தனிப்பட்ட கொள்கை சித்தாந்தம் சார்ந்து இருக்கலாம். ஆனால் எந்த ஒரு மதத்திற்கும் வாழ்வியலுக்கும் அது சார்ந்த மக்களுக்கும் நம்பிக்கைக்கும் எதிராகவோ அவர்களுக்கு மீது வன்மத்தை தூண்டும் வகையிலோ அழிக்க வேண்டும் என்ற ரீதியில் மத துவேசமாகவோ எந்த ஒரு அமைப்பும் கட்சியும் செயல்பட முடியாது. அது இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இந்த அடிப்படை உண்மை அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் கோலோச்சம் திமுக விற்கும் தன்னை ஒரு உலக அளவிலான அறிவு ஜீவி என்று காட்டிக் கொள்ளும் கமலஹாசனுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

சனாதான ஒழிப்பு மாநாட்டில் ஒரு மாநிலத்தின் அமைச்சர் ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் பிரதிநிதியாகவும் மாநில அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் கலந்து கொண்டதை இதுவரையில் கமலஹாசன் கண்டிக்கவில்லை. அந்த மேடையில் இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்ததும் கைத்தட்டி ஆரவாரத்ததையும் இதுவரை அவர் கண்டிக்கவில்லை. ஆனால் உதயநிதிக்கு எதிராக கண்டனங்களும் வழக்குகளும் வரும்போது அதையெல்லாம் எதிர்த்து ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்று பேசுவாரே ஆனால் இது முழுக்க முழுக்க ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சனாதன தர்மத்திற்கும் இந்த தேசத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வாழ்வியலுக்கும் எதிரான ஒரு அஜெண்டா அரசியல் என்பதை தவிர வேறில்லை . அதற்கு கமலஹாசனின் இந்த கருத்தும் ஆதரவு நிலைப்பாடுமே சாட்சியம்.

கமலஹாசனின் நிலைப்பாட்டின் படியே உதயநிதி ஒரு சிறு குழந்தையாகவே இருக்கட்டும். அந்த சிறு குழந்தைக்கு தான் எந்த விஷயத்தை பேச வேண்டும் ? எந்த விஷயத்தை பற்றி எப்படி பேச வேண்டும்? என்ற புரிதல் அவரின் பெற்றோர்கள் குடும்பம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதை அவரும் சரியாக பின்பற்றி இருக்க வேண்டும் . ஒருவேளை அவரின் குடும்பமும் பெற்றோரும் அவருக்கு சிறு வயதிலேயே அவரின் அறிவுக்கு வயதுக்கும் ஒவ்வாத விஷயங்களை வரம்பு மீறி பேசும்படி அவர்கள் கற்றுக் கொடுத்திருந்தால் இது அவர்களின் தவறு . அந்த வகையில் சட்டத்தின் நடவடிக்கைகளை அவர்கள் தாமாக முன்வந்து ஏற்க கமலஹாசனார் பரிந்துரை செய்யட்டும்.

அப்படியில்லாமல் பெற்றோரின் குடும்பத்தின் வளர்ப்பு அறிவுரையை மீறி சிறு குழந்தையான உதயநிதி தாமாக முன்வந்து இப்படி ஒரு தவறை செய்திருந்தால் அவர் சிறு குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அந்த சிறு குழந்தையை பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அப்பாற்பட்டு வேறு யாரேனும் தவறாக வழி நடத்துகிறார்களா? அந்த வகையில் உதயநிதி யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறாரா? என்பதையும் கமலஹாசனார் கண்டறிந்து சட்டத்தின் பார்வைக்கு கொண்டு சென்று அந்த சிறு குழந்தையை பத்திரமாக காப்பாற்றி அவரின் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கட்டும். அதுவே அந்த குழந்தையின் மீது அவருக்கு இருக்கும் உண்மையான அன்பு அக்கறையின் அடையாளமாக இருக்க முடியும்.

உதயநிதி பேசியது சிறுபிள்ளைத்தனம் என்றால் உதயநிதி சிறு குழந்தை என்றால் அவருக்கு வக்காலத்து வாங்கும் கமலஹாசனார் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் பெரியவரா ? என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும். அவர் பெரியவராக உணர்ந்தால் அவரது கடமையில் முதலில் நியாயமாக நடுநிலையாக நடந்து கொள்ள முயற்சி செய்யட்டும். கமலஹாசனும் ஒரு குழந்தை என்றால் எது சரி ? எது தவறு? என்று முடிவு செய்யும் பொறுப்பை பெரியவர்கள் இடம் விட்டு விடட்டும். சிறு குழந்தையாக அவரின் வழக்கமான விளையாட்டை மட்டும் அவர் பார்க்கட்டும். வயதுக்கு மீறிய விஷயங்களில் தலையிட வேண்டாம்.

இரண்டையும் செய்யாமல் ஒரு குழந்தை அத்தனை தவறுகளையும் செய்யும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு அந்த தவறுகளின் விளைவுகள் அந்த குழந்தையை நோக்கி வரும்போது சிறு குழந்தை அப்படித்தான் இருக்கும் .எதுவும் கேட்காதீர்கள். கண்டிக்காதீர்கள் என்று பேசுவது மனிதருக்கு அழகல்ல . இதே மாநிலத்தில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு வகையில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது. அப்படி ஓட்டுனர் உரிமம் பெறாத உரிய வயது வராத 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டு சக்கர வாகனங்களையோ 4 சக்கர வாகனங்களையோ இயக்குவது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதையும் மீறி குழந்தைகள் வாகனத்தை இயக்கினாலும் அதன் மூலம் விபத்துக்கள் உயிரிழப்புக்கள் சேதங்களை ஏற்படுத்தினாலும் அதற்குரிய சட்டம் அந்த குற்றத்திற்கு குழந்தைகளை கடந்து பெற்றோர் இருவருக்கும் அல்லது இருவரில் யாரோ ஒருவருக்கும் தண்டனையை வழங்கலாம் என்ற வகையில் தற்போது சட்டம் நடைமுறையில் இருக்கிறது . இந்த சட்டம் சொல்ல வருவது ஒன்று குழந்தைகள் தவறிழைக்காத வரையில் பெரியவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் . அதையும் மீறி தவறுகள் நேரிடும் பட்சத்தில் குழந்தைகளின் தவறுகளுக்கு பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும் என்பதே.

உதயநிதி குழந்தை என்பது உண்மையானால் அவரது இந்த தவறுக்கு அவரது பெற்றோர் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும். அதற்கு கமல்ஹாசன் பரிந்துரை செய்யட்டும். உதயநிதி போலவே கமலஹாசனும் குழந்தை என்றால் உதயநிதிக்கு வக்காலத்து வாங்கும் வேலையை கமலஹாசன் கைவிடட்டும் .

முதலில் தான் பெரியவனா ? அல்லது தானும் உதயநிதி போல் சிறு குழந்தையா? என்பதை முதலில் கமலஹாசன் அவரும் உணர்ந்து கொண்டு பொதுவெளியில் அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிக்கட்டும். அதுவே அவரது கருத்தை சிறுபிள்ளைத்தனமான கருத்தாக அணுகுவதா? அல்லது கமலஹாசன் என்ற பெரியவரின் கருத்து என்று அதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்தும்.


Share it if you like it