ஹவில்தார் அப்துல் ஹமீது
நாட்டின் உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ராவை பெற்ற 10 வது வீரர் ஹவில்தார் அப்துல் ஹமீது ஆவார். இவர் 1 ஜூலை 1933 இல் உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள தாமுபூர் கிராமத்தில் முகமது உஸ்மான் மற்றும் சகினா பேகம் ஆகியோரின் மகனாக பிறந்தார்.
எளிமையான குடும்பத்தை சேர்ந்த அப்துல் ஹமீது, தேவா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாததால் தந்தையுடன் அவரது தையல் கடையில் வேலை பார்த்தார்.
பின்னர் அப்துல் ஹமீது 1953-ம் ஆண்டு தனது 20-வது வயதில் வாரணாசியில் ராணுவத்தில் சேர்ந்தார். நசிராபாத்தில் உள்ள கிரெனேடியர்ஸ் ரெஜிமென்டல் மையத்தில் பயிற்சி பெற்றபிறகு, அவர் 1955 இல் 4 கிரெனேடியர்ஸ் பட்டாலியனில் நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அவர் ஒரு துப்பாக்கி நிறுவனத்தில் பணியாற்றினார், பின்னர் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்துல் ஹமீது ராணுவத்தில் பணியாற்றிய போது ஆக்ரா, அமிர்தசரஸ், ஜம்மு காஷ்மீர், டில்லி, ராம்கர் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய – சீன போரின் போது, அவரது படைப்பிரிவு 7 வது காலாட்படை படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது.மேலும் சீனர்களுக்கு எதிரான நாம்கா சூ போரில் பங்கேற்றது. சீனாவுடனான போருக்குப் பிறகு, அவர் அம்பாலாவுக்குத் திரும்பினார். அதன் பின் கம்பெனி குவார்ட்டர் மாஸ்டர் ஹவில்தாராக நியமிக்கப்பட்டார்.
ஐந்து வருடங்கள் பீரங்கி எதிர்ப்புப் பிரிவில் பணியாற்றிய பிறகு, அப்துல் ஹமீது பதவி உயர்வு பெற்று, அவரது நிறுவனத்தின் குவாட்டர் மாஸ்டர் ஸ்டோர்களின் பொறுப்பை பெற்றார். பட்டாலியனில் 106 மிமீ ரீகாயில்-லெஸ் ரைஃபிளை (ஆர்.சி.எல்) சுடுவதில் அவர் சிறந்தவராக விளங்கினார்.எனவே அவர் பட்டாலியனின் ரீகாயில்-லெஸ் ரைபிள் படைப்பிரிவுக்கு கட்டளையிடும் அவரது முன்னாள் பொறுப்புக்கு திரும்பினார்.
இந்த சூழ்நிலையில் 1965ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் துவங்கியது. செப்டம்பர் 8ம் தேதி, எதிரிகள் 4 வது கிரெனேடியர்ஸ் நிலை மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தினர்.
அப்துல் ஹமீதின் தலைமையின் கீழ் அவரது படைப்பிரிவு ஆயுதங்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு திறம்பட தாக்குதலை எதிர்கொண்டனர்.அப்துல் ஹமீது தனது ஜீப்பின் பயணிகள் பக்கத்தில் ஏறி, கரும்பு தோட்டத்தின் மறைவின் கீழ், ஆர்.சி.எல் துப்பாக்கியை எதிரிகளின் பீரங்கிகள் மீது செலுத்தினார். அவர் ஒரே நாளில் இரண்டு பீரங்கிகளை அழித்தார். மேலும் 4 பீரங்கிகளில் இருந்த பாகிஸ்தான் வீரர்களை பீரங்கிகளை கைவிட்டு ஒட வைத்தார்.
பாகிஸ்தானின் பீரங்கிகளை எதிர்கொள்ள அப்துல் ஹமீதின் படையிடம் ஆர்.சி.எல் துப்பாக்கிகளை தவிர வேறு எதுவும் இல்லாததால் கன்னி வெடிகளை வைக்க பொறியாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி, பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் தொடங்கியது. ஆனால் அதனால் அதிக சேதம் ஏற்படவில்லை. அந்த நாளின் முடிவில், அப்துல் ஹமீதும் அவரது படையினரும் மேலும் இரண்டு பீரங்கிகளை அழித்தனர்.
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, பீரங்கிகளுடன் மீண்டும் ஒரு பாகிஸ்தான் படைப்பிரிவு 4 வது கிரெனேடியர்களின் நிலையைத் தீவிரமாக தாக்கியது. விரைவில், எதிரிகளின் பீரங்கிகள் இந்திய நிலைகளை ஊடுறுவின. நிலைமையின் தீவிரத்தைப் பார்த்த அப்துல் ஹமீது தனது ஜீப்பில் துப்பாக்கியை ஏற்றிக்கொண்டு எதிரிகளின் பக்கவாட்டுக்கு சென்றார்.
எதிரிகளின் உக்கிரமான தாக்குதலை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, மூன்று பீரங்கிகளை ஒன்றன் பின் ஒன்றாக அழித்தார். ஆனால் அவர் அடுத்த பீரங்கியை தாக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது ஜீப் எதிரிகள் வீசிய வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த அப்துல் ஹமீது வீர மரணம் அடைந்தார்.
அப்துல் ஹமீதின் வீரம், குறிப்பிடத்தக்க சாதனை, முன்மாதிரியான துணிச்சல் மற்றும் தைரியத்திற்காக, அவருக்கு மரணத்திற்குப் பின் நாட்டின் உயரிய வீர விருதான ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு அவர்களது பீரங்கிகளை தாக்கி அழித்த அப்துல் ஹமீதின் வீரத்திற்கு நம் தேசம் என்றென்றும் தலைவணங்கும்.