கொரோனா காரணமாக கல்விமுறை ஆன்லைனுக்கு மாறியிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் உயர்கல்வி மையங்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறது ஆய்வறிக்கை.
2019-ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், பலவகையாக உருமாற்றம் அடைந்து தற்போதுவரை உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இதனால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்தான், உயர்கல்வித் துறையின் எதிர்காலம் குறித்து எர்னஸ்ட் அண்டு யங் என்கிற நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 பல்கலைக்கழகங்களின் வேந்தர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த அறிக்கையில், ‘கொரோனா காரணமாக பல்கலைக்கழகங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் படிப்புக்கான மாணவர்களின் எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் சவால்கள் உள்ளிட்டவற்றை அவை எதிர்கொள்ள நேரிடும். பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பாது.
மேலும், உயர் கல்வித் துறையில் வேகமான மாற்றம் வரவிருக்கிறது. இதை சமாளிக்கும் திட்டங்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலான கல்வியை மேம்பட்ட தரத்தில் வழங்கினால் மட்டுமே போட்டியை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.