மதுரை மேலூரில் ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பூத் ஏஜென்ட்டை போலீஸார் கைது செய்திருப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19-ம் தேதி) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது, பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பலரும் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வாக்களிக்க வந்தனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூரிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் ஹிஜாப்பை அகற்றும்படி கூறியதால் பிரச்னை வெடித்தது. இதில்தான், பா.ஜ.க. பூத் ஏஜென்ட் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் பா.ஜ.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் அமைந்துள்ள அல் அமீன் பள்ளியில் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹிஜாப், புர்கா அணிந்து வந்தார். எனவே, அந்த பூத்தில் இருந்த பா.ஜ.க. நிர்வாகி கிரிராஜன், மேற்படி இஸ்லாமிய அடிப்படைவாத பெண்ணிடம், ஹிஜாப்பை அகற்றி முகத்தைக் காட்டுமாறு கூறியிருக்கிறார். அதாவது, வாக்களிக்க வருபவர், மேற்படி பெயரைக் கொண்ட உண்மையான நபர்தானா என்பதை அறிவதற்காக, பூத் ஏஜென்ட்கள் இப்படி கேட்பது வழக்கமான நடைமுறைதான்.
மேலும், ‘கடவுச்சீட்டு வேண்டுமென்றால் ஹிஜாப்பை நீக்கி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இஸ்லாமிய பெண்கள், வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹிஜாப்பை அகற்றி புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு. தவிர, மத நம்பிக்கையை காரணம் காட்டி முக அடையாளத்தை காட்ட மறுத்தால் வாக்களிக்க வேண்டாம்’ என்று 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான், மேலூர் பூத் ஏஜென்ட் கிரிராஜனும், அந்த இஸ்லாமிய அடிப்படைவாத பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றி முகத்தைக் காட்டுமாறு கூறியிருக்கிறார்.
ஆனால், அந்தப் பெண்ணோ, ஹிஜாப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், ஹிஜாப்பை அகற்றாமல் வாக்களிக்க விட முடியாது என்பதில் கிரிராஜன் உறுதியாக இருந்தார். ஆனால், ஆளும்கட்சி ஆதரவு வாக்குப்பதிவு அலுவலர்களோ, பா.ஜ.க. ஏஜென்ட் கிரிராஜனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். மேலும், கிரிராஜனை வெளியேற்றாவிட்டால் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், சுமார் அரை மணிநேரம் வாக்குப்பதிவையும் நிறுத்திவிட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியேறுமாறு கிரிராஜனிடம் கூறியிருக்கிறார்கள். வெளியேற மறுத்த கிரிராஜனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள். மேலும், ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கிரிராஜன் மீது வாக்குப்பதிவு அலுவலர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கிரிராஜனை கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம்தான், பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஹிஜாப், புர்கா அணிந்து வந்த அடிப்படைவாத இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றி முகத்தைக் காட்டுமாறு அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர் கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்ற மறுத்திருக்கிறார். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அந்த அடிப்படைவாத பெண் வாக்களிக்காமலேயே சென்று விட்டார். ஆகவே, தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு நீதி, பா.ஜ.க. பூத் ஏஜென்ட்டுக்கு ஒரு நீதியா என்று கொந்தளிக்கிறார்கள் பா.ஜ.க.வினர், மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மனதில் வைத்து, ஹிஜாப்பை அகற்றும்படி கூறிய பா.ஜ.க. பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றியதோடு, அவரை கைது செய்திருப்பது மிகப்பெரிய தவறு. ஆகவே, மேற்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.