ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து விமர்சனம் செய்த கன்னட நடிகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், சீருடை தவிர வேறு எந்த ஆடைகளையும் அணியக் கூடாது என்று மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து அடிப்படைவாத மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், இறுதித்தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை மாணவ, மாணவிகள் அணிய வேண்டாம் என்று உத்தரவிட்டதோடு, விசாரணையை கூடுதல் பெஞ்சுக்கும் மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா, “கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கவலையளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன். தற்போதும் அதே நீதிபதிதான் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் அவருக்கு சரியான புரிதல் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சேஷாத்திரிபுரம் போலீஸார் தாமாகவே முன்வந்து சேத்தன் குமார் அஹிம்சா மீது இந்திய தண்டனைச் சட்டம் 505 (2), 504 ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி சேத்தன் குமார் அஹிம்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், கற்பழிப்பு வழக்கு ஒன்றில் ராகேஸ் என்பவருக்கு முன்ஜாமின் வழங்கி இருக்கிறார். மேலும், ‘கற்பழிக்கப்பட்ட பிறகு இந்திய பெண் தூங்குவது பொருத்தமற்றது. அப்படி இருக்க எப்படி ஒருவரால் இப்படி இருக்க முடியும்’ எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார். இது 21-ம் நூற்றாண்டில் தீக்ஷித்தின் பெண் மீதான வெறுப்பைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார். இந்த பதிவை மேற்கோள்காட்டித்தான் தற்போது ஹிஜாப் வழக்கில் நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் குறித்து பதிவிட்டிருக்கிறார்.