ஹிஜாப் அணிவதை தடுப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள் என்று வாய்த்துடுக்காக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் சீருடை அணிந்து வருவதுதான் வழக்கம். ஆனால், திடீரென இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், வழக்கத்துக்கு மாறாக ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். இதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், அம்மாணவிகள் புர்கா அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். பதிலுக்கு, ஹிந்து மாணவ, மாணவிகள் காவி நிற ஷால் மற்றும் துண்டு அணிந்து வந்தனர். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சீருடையைத் தவிர வேறு எந்த ஆடையும் அணிந்து வரக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தற்போது கோர்ட் வரை சென்றிருக்கிறது. கோர்ட்டும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை யாரும் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கோர்ட் உத்தரவைுயம், மாநில அரசின் தடையும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் சட்ட திட்டங்களை மதிக்காமலும், இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் வழக்கம்போல ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே வந்தனர். இதை தட்டிக்கேட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்தான், ஹிஜாப் அணிவதை தடுப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள் என்று திமிராகக் கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முகரம் கான். கர்நாடகாவின் கலபுர்கி என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முகரம் கான், “ஹிந்துக்கள் காவி உடை அணிந்து கொண்டு, நமது குழந்தைகளிடம் ஹிஜாப்பை கழற்றுக்கள் என்று கூறுகின்றனர். மேலும், ஹிஜாப் அணிய தடை விதிக்கின்றனர். நமது குழந்தைகளை ஹிஜாப் அணியவிடாமல் தடுப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார். இவரது திமிர் பேச்சுதான் தற்போது வினையாகி இருக்கிறது. மத மற்றும் இனக் கலவரத்தை தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, இப்படித்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் திமிராகப் பேசி மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே முஸ்லிம் மாணவிகளும், பெண்களும் புர்கா அணிகின்றனர். தங்கள் அழகை மறைத்து பாலியல் தொல்லைகள் நடைபெறாதவாறு காத்துக் கொள்கின்றனர்” என்று கூறியிருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பவே, மன்னிப்புக் கோரினார்.