ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ. அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், திடீரென கடந்த ஜனவரி மாதம் முதல் ஹிஜாப், பர்தா, புர்கா என இஸ்லாமிய மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்ததால், அம்மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த, ஹிந்து மாணவ, மாணவிகள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் நாங்களும் காவி ஷால், துண்டு ஆகியவற்றை அணிந்து வருவோம் என்று போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஹிஜாப், பர்தா, புர்கா, காவி ஆகிய ஆடைகளுக்கு தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்த 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது என்று உத்தரவிட்டனர். ஆனாலும், மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர் அடிப்படைவாத மாணவிகள். இதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய கடமையல்ல. ஆகவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை கண்டித்து, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று (மார்ச் 17-ம் தேதி) பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆர்ப்பாட்ட மேடையிலேயே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆம், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசும் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நீதிபதியை, ஆட்டோவை ஏற்றி கொலை செய்ததை அனைவரும் அறிந்திருக்கலாம். அதேபோல, எல்லா இடத்திலும் உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். ஆகவே, கர்நாடக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விபத்து, கொலை என ஏதாவது ஒரு அசம்பாவிதத்திற்கு உள்ளானார்களேயானால், அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் பொறுப்பு” என்று கொலை மிரட்டல் விடுத்து திமிராக பேசியதோடு, “என்ன என் மீது கொலை மிரட்டல் வழக்குப் போடப் போகிறீர்களா? முடிந்தால் போட்டுப் பாருங்கள்” என்று போலீஸாருக்கு சவால் விடுக்கிறார். ஒரு அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு துணிச்சலாகப் பேசுகிறார் என்றால், இதற்குப் பின்னணியில் இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆளும் தி.மு.க. அரசு, மைனாரிட்டி மக்களுக்கு சாதகமாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக, அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளுக்கே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றால், இது நாட்டுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே, சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான் என்று இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத உணர்வுகளை தூண்டும், புண்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆகவே, மத உணர்வை தூண்டும் வகையில் பேசிய, அந்த நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.