கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப், காவி அணிய அம்மாநில அரசு தடை விதித்து அதிரடி காட்டி இருக்கிறது. இதில், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எனவே, ஹிஜாப் மற்றும் காவிக்கு மாநில அரசு தடை விதித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அடிப்படைவாத மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அதேசமயம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை மாணவ, மாணவிகள் அணியக் கூடாது என்று கோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனாலும், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வழக்கம்போல ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே வந்தனர் அடிப்படைவாத மாணவிகள். இதற்கு, கல்வி நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆசிரியர்கள், முதல்வர்களுடன் அடிப்படைவாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப், காவி அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கர்நாடகாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சார்பில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்காக ஏராளமான பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிய அனுமதி உண்டு. இந்த நிலையில்தான், மேற்கண்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப், பர்தா, புர்கா உள்ளிட்ட மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிய கர்நாடக மாநில அரசு தடை விதித்திருக்கிறது.
இதுகுறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இத்தடை சிறுபான்மை நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஆகவே, இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஹிஜாப், காவி ஷால் போன்ற மத அடையாளங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை அணியாமல் வகுப்புக்கு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.