ஹிஜாப், அடக்குமுறையின் அடையாளம் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சாடியிருக்கிறார்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் தஸ்லிமா நஸ்ரின். அடிப்படையில் மருத்துவரான இவர், பின்னர் பிரபல எழுத்தாளராக உருவெடுத்தார். இவர், பெண்ணியம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வந்தார். மேலும், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை தனது எழுத்துக்கள் மூலம் கண்டித்தார். இதனால், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். 1993-ல் இவர் எழுதிய ல்ஜஜா என்கிற புத்தகம், மிகப்பெரிய அளவில் இவருக்கு புகழை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, மிகப்பெரிய சர்ச்சையிலும் சிக்க வைத்தது. இதனால், இவருக்கு அடிக்கடி மிரட்டல்களும் வந்தன.
எனவே, இவரால் பங்களாதேஷில் வசிக்க முடியவில்லை. ஆகவே, பங்களாதேஷிலிருந்து வெளியேறியவர், சுவீடன், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்தார். நிறைவாக, இந்தியாவில் தஞ்சமடைந்தவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மையுள்ள நாடு என்று இவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இவர்தான், தற்போது ஹிஜாப்புக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மத உரிமை என்பது அனைவரும் கல்வி பெறுவதுதான். ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவை அடக்கு முறையின் அடையாளங்கள். சில பெண் வெறுப்பாளர்களால் 7-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஹிஜாப். இந்த ஹிஜாப், புர்கா ஆகியவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் அவமானப்படுத்துவதாக கருதுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.