காங். மாஜி மத்திய அமைச்சர் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

காங். மாஜி மத்திய அமைச்சர் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Share it if you like it

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன், டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க.வில் ஐக்கியமாவது அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார். அந்த வகையில், தற்போது ஹிமாச்சலப பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் இன்று பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இன்று நண்பகல் 12 மணிக்கு பா.ஜ.க.வில் சேரவுள்ளார் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனால், அவர் யாராக இருக்கும்? எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று பல்வேறு ஊடகங்களும் பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதித்து வந்தன. இதனால், அரசியல் கட்சிகள் மத்தியிலும் அவர் யாராக இருக்கும் என்கிற பரபரப்பு நிலவியது. இந்த சூழலில்தான், ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் இன்று பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியில் 45 வருடங்களாக இருந்தேன். இன்று அந்தக் கட்சி தலைமையே இல்லாமலும், எந்தப் பாதையில் செல்கிறது என்று தெரியாமலும் இருக்கிறது. மேலும், காங்கிரஸ் தொலைநோக்கு பார்வை இல்லாமலும், களத்தில் இறங்கி பணி செய்ய யாரும் இல்லாத நிலையிலும் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், அம்மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவர் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


Share it if you like it