ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் உக்கிரமாக போர் நடந்து வரும் சூழலில், இரு நாட்டைச் சேர்ந்த ஜோடி, இந்தியாவில் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கும் சம்பவம், வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் செர்ஜி நோவிகோவ். இவர், கடந்த பல வருடங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் செட்டிலாகி இருக்கிறார். அங்கு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எலோனா பிரமோகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நட்பு காதலாக மலர்ந்து, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேற்படி ஜோடி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்து வந்து தர்மசாலாவிற்கு அருகிலுள்ள தரம்கோட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீதான போரை தொடங்கி இருக்கிறது ரஷ்யா.
இந்த சூழலில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, திருமணத்துக்கான ஏற்பாடுகளை உள்ளூர் மக்கள் செய்திருக்கிறார்கள். அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்படி காதல் ஜோடிகளுக்கு தரம்கோட்டிலுள்ள திவ்யா ஆசிரமம் கரோட்டாவில் திருமணம் நடந்தது. இதில், ஹைலைட் என்னவென்றால், ரஷ்ய – உக்ரைன் ஜோடி, ஹிந்து பராம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதுதான். இத்திருமணத்தில் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு, அனைத்து சடங்குகளையும் செய்து வைத்தனர். மேலும், பாரம்பரிய உள்ளூர் நாட்டுப்புற இசைக்கு நடனமாடி, புதுமணத் தம்பதிகளை தங்கள் சொந்த நாட்டை போல உணர வைத்தனர். விருந்தினர்களுக்கு காங்கிரி தாம் எனப்படும் அறுசுவை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து திவ்யா ஆசிரமம் கரோட்டாவின் பண்டிட் சந்தீப் சர்மா கூறுகையில், “எங்கள் பண்டிட் ராமன் ஷர்மாதான் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும், சனாதன தர்மத்தின் மரபுகளின்படி திருமணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். மேலும், ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தத்தையும் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் தம்பதிக்கு விளக்கினார். திருமணத்தின்போது இந்த ஜோடி பாரம்பரிய இந்திய திருமண ஆடைகளை அணிந்திருந்தனர், மேலும், பாராயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இத்திருமணத்தில் தரம்கோட்டில் வசிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்” என்றார்.