இமயமலையில் உள்ள சியாச்சின் பனிமலையில் 38 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய ராணுவ வீரரின் உடலை ராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இமயமலையிலுள்ள சியாச்சின் பனிமலை பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த சூழலில், சியாச்சின் மலைப் பகுதியைக் கைப்பற்றுவதற்காக, ஆபரேஷன் மெகதூத் என்கிற திட்டத்தை கடந்த 1984-ம் ஆண்டு இந்திய ராணுவம் கையாண்டது. அதன்படி, இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே சியாச்சின் பனிமலையில் சண்டை நடந்தது. அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில்தான், மாயமானவர்களில் ஒருவரான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் சந்திரசேகர் ஹர்போல் என்பவரை, இந்திய ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர், இந்திய ராணுவத்தில் 1971-ம் ஆண்டு சேர்ந்து குமாவுன் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தவர். இவரது உடல் பாகங்களுடன் அவரது பேட்ஜ் கிடந்திருக்கிறது. இதை வைத்தே அவர் சந்திரசேகர் ஹர்போல்தான் என்பதை ராணுவ வீரர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். 38 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு, அவரது மனைவி சாந்தி தேவி நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து சாந்திதேவி கூறுகையில், “எங்கள் இருவருக்கும் 1975-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரு மகள்கள். அப்போது, ஒருவருக்கு 9 வயது. இன்னொருவருக்கு நாலரை வயது. எனக்கு 25 வயது இருக்கும்போது எனது கணவர் காணாமல் போனார். பின்னர், எனது குழந்தைகளை வளர்ப்பதிலே கவனம் செலுத்தி எனது வாழ்க்கை நடத்தி வந்தேன். 38 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எனது கணவர் உடல் கிடைத்திருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தாயாகவும், ஒரு துணிச்சலனா தியாகியின் மனைவியாகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.