தமிழகம் முழுவதும் 1.25 விநாயகர் சிலைகளை அமைக்க இருப்பதாக இந்து முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறது.
வருகிற ஆகஸ்ட் 31 – ஆம் தேதி, விநயாகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, நா. முருகானந்தம், மாநிலப் பொதுச் செயலாளர், அட்வகேட் ஜி. கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர், த.மனோகரன் மாநில செயலாளர் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது;
ஆகஸ்ட் 31 – ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1.25 லட்சம் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த இருக்கிறோம்.
சென்னை மாநகரில் 5501 விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. அதற்கான, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி, காப்புக் கட்டி விரதம் இருக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (22ஆம் தேதி) சிறப்பாக துவங்கியது.
இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா செய்தியாக “பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்” என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வழக்கம்போல, தாய்மார்கள் தினம், சிறுவர்கள் தினம், சமுதாய நல்லிணக்கத்தினம் என ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படும். மேலும், இந்த ஆண்டு சுதந்திரத்தின் அமுத விழாவை முன்னிட்டு தினசரி சுதந்திரப்போராட்ட தியாகிகள் படத்திறப்பும், சிறப்பாக அவர்கள் பற்றிய கருத்துரைகளும் இடம்பெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றுக்காரணமாக உலகமே முடங்கியிருந்தது. அதனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா மூலம் மக்களிடம் புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டு வருவதை காண்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்து எழுச்சி பெருவிழாவாக சென்னையில் வருகின்ற செப்டம்பர் 4 -ஆம் தேதி ஞாயிறு அன்று விசர்ஜன ஊர்வலம் வழக்கம்போல 3 இடங்களில் இருந்து துவங்கி பட்டினம்பாக்கம் கடற்கரையில் நிறைவுபெறும். சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் 1.31 மணிக்கும், வள்ளுவர் கோட்டம் அருகில் 1.31 மணிக்கும், முத்துசாமி பாலம் (பல் மருத்துவ கல்லூரி அருகில்) 3.31 மணிக்கும் ஆகிய மூன்று ஊர்வலமானது தலைவர்களால் துவக்கி வைக்கப்படும்.
தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற பூரண ஒத்துழைப்பு நல்வார்கள் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசும், அதிகாரிகளும் ஆதரவு தந்து உதவிட வேண்டும் என கேட்டு கொண்டனர்.
ஏ.டி. இளங்கோவன்
மாநில செய்தித் தொடர்பாளர்
&மாநகரத் தலைவர்