ஹிந்து பெண்களுக்கு எதிராக சைக்காலஜி போர்!

ஹிந்து பெண்களுக்கு எதிராக சைக்காலஜி போர்!

Share it if you like it

கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்தின் கொடுமை காரணமாக, மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்தே தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள், ஹிந்து பெண்களை திட்டமிட்டு இழுவுபடுத்தும் ஆபாசக் கதைகள், மீம்ஸ்கள் சமூக வளைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகிவருவது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக ‘#hslut4mstuds’ என்ற ஹேஷ்டேக் மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர், ரெட்டிட் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கதைகள் பரவி வருகிறது. இந்த ஹேஷ்டேக் மூலம் பரப்பப்படும் கதைகள் அனைத்திலுமே ‘கரு’ ஒன்றுதான். எப்படி ஹிந்து மதத்தில் தீவிரப்பற்று கொண்ட ஒரு பெண் இஸ்லாமிய இளைஞனால் ‘மானபங்கப்படுத்தப்படுகிறாள்’? என்பதே! முழுக்க முழுக்க ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி, மதமோதலைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளுக்கு எதிராக பல்வேறு ஹிந்து அமைப்புகளும், பெண்ணியவாதிகளும் தற்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பெண் உரிமை ஆர்வலர் உலகம்மாளிடம் பேசினோம். ‘சமூக வலைத்தளங்கள் என்றாலே ஆபாசம் இருப்பது சகஜம்தான். ஆனால், இந்த ‘#hslut4mstuds’- ஐ, வெறும் ஆபாசக் கதை என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. காரணம், ‘ஹிந்து விபச்சாரிகளும், இஸ்லாமிய இளைஞர்களும்’ என்பதன் சுருக்கமே ‘#hslut4mstuds’ என்ற ஹேஷ்டேக். ஹிந்து பெண்கள் என்றால் விபச்சார எண்ணம் கொண்டவர்கள். அவர்களை வலிமை இல்லாத ஹிந்து ஆண்களால் ஈர்க்க முடியாது. அதேநேரம், இஸ்லாமிய இளைஞர்களைக் கண்டாலே ஹிந்துப் பெண்கள் கவிழ்ந்துவிடுவார்கள்’ என்று சித்தரிக்கிறது இந்தக் கதைகள்.

இதைப் படிக்கும்போது ‘சமூகவலைதளங்கள் என்றாலே அப்படித்தான் இருக்கும்! நாம்தான் ஒதுங்கிச் செல்லவேண்டும்’ என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் இதுபோன்ற கதைகளை எழுதி பரப்புவதற்குப் பின்னால் உள்ள சூட்சுமமே வேறு! சுருக்கமாகச் சொன்னால், இது ஹிந்துக்கள் மீது சமூக விரோதிகள் தொடங்கியிருக்கும் ஒரு ‘சைக்காலஜி போர்!’ பொதுவாகவே, நமது நாட்டில் பெண்கள் மரியாதைக்குறியவர்களாகவும், குடும்ப கெளரவத்திற்கு அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல, தர்மக் கருத்துக்களை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருப்பவர்களும் பெண்களே!

கற்பின் சக்திக்கு இலக்கணம் வகுத்தவர் கண்ணகி. சத்ரபதி சிவாஜிக்கு ஹிந்து மதத்தின் மேன்மையை புரியவைத்து ‘ஹிந்து சாம்ராஜ்யம்’ அமையக் காரணமாக இருந்தவர், அவரது அன்னை ஜிஜாபாய். ஆங்கிலேயர்களிடம் அடிபணியக்கூடாது என்பதை புரியவைத்தவர்கள் ஜான்சி ராணி லட்சுமிபாய் மற்றும் வேலு நாச்சியார் போன்ற விராங்கனைகளே. இன்னும் ஆண்டாள், ஒளவையார் என்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து சென்ற ஹிந்து பெண்களின் பட்டியலை எழுதிக்கொண்டே செல்லலாம். ஆக, ஒரு தாயாக, மனைவியாக, மகளாக, தலைவியாக, சமூகப் போராளியாக தொன்றுதொட்டு பல சாதனைகளை புரிந்தவர்கள் நமது பெண்கள்.

இதுபோன்ற காரணங்களால் ஹிந்து சமுதாயமே தங்களது பெண்கள் மீது மிகுந்த பெருமை கொண்டவர்களாக உள்ளது. அந்தப் பெருமையை உடைக்கும் வகையில் எழுதப்படும் கதைகள்தான் இவை. இது இந்தக் கதைகளை படிக்கும்போதே நமக்கு புரிந்துவிடும். அடிப்படையில் அனைத்து கதைகளிலுமே பெண்கள் தீவிர ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் என்று எழுதப்படுகிறது. இன்று ஒவ்வொரு சாதாரண குடும்பத்திலும், இயல்பாகவே ஹிந்து மத ஆன்மிகத்தின் வேராக இருப்பது பெண்களே! ஏனென்றால் குடும்பம், கணவன், குழந்தை மீது அன்பு செலுத்தி அவர்களுக்காக அனைத்து பூஜைகளையும் அந்தப் பெண்தான் செய்கிறாள். அப்படிப்பட்ட பெண்களைத்தான் குறிப்பிடுகிறது இந்தக் கதை.

அடுத்தது, அந்தப் பெண்கள் என்னதான் ஹிந்து மத நம்பிக்கையுடையவர்களாக இருந்தாலும், இஸ்லாமிய ஆண்களைப் பார்க்கும்போது அவர்களது மனம் சஞ்சலிப்பதாக கதை நகர்த்தப்படுகிறது. இதன்மூலம் இயல்பான ஹிந்து குடும்பத்தின் பெண்கள் அனைவருமே, இஸ்லாமிய இளைஞர்களால் எளிதில் ஈர்க்கப்படக்கூடியவர்கள் என்ற விஷ விதை விதைக்கப்படுகிறது. இன்னும் சில கதைகளில், ஹிந்து பெண்கள், தாங்கள் இஸ்லாமியர்களால் மானபங்கப்படுத்தப்படுவதை ரகசியமாக விரும்புவது போல கதை எழுதப்பட்டுள்ளது. #hslut4mstuds என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதைவிட வக்கிரம், பெரும்பாலான கதைகளில், நடக்கும் ஆபாச சம்பவங்களை, சம்மந்தப்பட்ட பெண்ணின் மகனே விவரிப்பது போல எழுதியிருப்பதுதான். ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு பெருகிவிட்ட இந்தக் காலத்தில், ஆபாசக்கதைகளின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தக் கதைகளை யார் படித்தாலும் சரி, நிச்சயம் அவர்கள் மனோரீதியாக பாதிக்கப்படுவது உறுதி. அது ஒரு ஹிந்து இளைஞனாக இருந்தால், ஹிந்து பெண்கள் மீதான மரியாதை படிப்படியாக குறையும். கதைகள் அனைத்துமே குடும்பப் பெண்களை மையப்படுத்தி இருப்பதால், தனது குடும்பப் பெண்கள் மீதே சந்தேகம் ஏற்படத் தோன்றும். தெய்வ பக்தியுடன் ஒரு பெண் இருந்தாலே அவள் ‘அப்படித்தான்’! என்ற எண்ணத்தை உருவாக்கி குடும்ப உறவு, ஒற்றுமை சீர்கெட்டுப்போகச் செய்யும்.

இதுவே ஒரு இஸ்லாமிய இளைஞனாக இருந்தால், ஹிந்து பெண்களை போகப் பொருளாக, பார்க்கும் எண்ணம் உருவாகும். ஏற்கெனவே கேரளா போன்ற மாநிலங்களில் பெண்கள் மீதான ‘லவ் ஜிகாத்’ தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கதைகள் பரவுவது பெண்கள் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதுதான் இந்த சைக்காலஜி போர் தொடங்கியிருப்பதன் நோக்கம். ஆபாசக் கதை படித்தால், சமுதாயம் மாறிவிடுமா? என்று இன்னமும் சிலர் கேள்வி கேட்கலாம். இன்று சர்தார்ஜி என்றாலே முட்டாள் என்ற எண்ணம் பலருக்கு உண்டு! அதற்குக் காரணம், உண்மை துளியும் இல்லாத சர்தார்ஜி ஜோக்குகள்.

அதேபோலதான் இதுவும். இன்று இதுபோன்ற ஆபாசக் கதைகளுக்கு நமது எதிர்வினையைத் தெரிவிக்காமல் விட்டால், அடுத்த 100 ஆண்டுகள் கழித்து வரப்போகும் சந்ததிகளுக்கு ஒளவையாரையும் தெரியாது, வேலு நாச்சியாரையும் தெரியாது. மாறாக ஹிந்து பெண்கள் என்றாலே அப்படித்தான் என்ற எண்ணம் உருவாகியிருக்கும். ஆகவே, உடனடியாக இதுபோன்ற ஆபாச கதைகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக ஆபாசக் கதைகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பிரபல சைபர் கிரைம் வழக்கறிஞர் என்.கார்த்திகேயனிடம் கேட்டோம். ‘பொதுவாக இரு தரப்பினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், ஐ.பி.சி. செக்‌ஷன் 153A பிரிவின் கீழ் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும். அதேபோல, கோயில் போன்ற புனிதத் தலங்கள் அவமானப்படுத்தபடுவதால், ஐ.பி.சி. 295 மற்றும் 295A பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.

தற்போது டெல்லி காவல்துறை இதுபோன்ற ஆபாசக் கதைகளை வெளியிட்டவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில காவல்துறையிலும் புகார்கள் குவிந்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது.


Share it if you like it