மதம் மாறிய தலித்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அதிரடி பதில் மனு!

மதம் மாறிய தலித்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அதிரடி பதில் மனு!

Share it if you like it

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, மதம் மாறிய தலித்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறைச் சூழல், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 1950-ம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட ஜாதிகள்) ஆணை, ஹிந்து, பௌத்தம் அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே பட்டியல் ஜாதி அந்தஸ்தை வழங்குகிறது, இது அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தவிர, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இடஒதுக்கீட்டான 27 சதவீதத்திற்கு மட்டும் தகுதியுடையவர்கள் அல்ல, ஓ.பி.சி.க்களுக்கான மெட்ரிக் கல்வி உதவித்தொகை, விடுதிகள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதியத்தால் மேற்கொள்ளப்படும் பிற வருமானம் ஈட்டும் செயல்பாடுகள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பலன்கள் பெறுவதற்கும் தகுதியுடையவர்கள் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன் மூலம் மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் கிடைப்பது கடினம்தான்.


Share it if you like it