இந்தியா கோவிட் வைரஸை வெற்றிக்கொண்ட வரலாறு

இந்தியா கோவிட் வைரஸை வெற்றிக்கொண்ட வரலாறு

Share it if you like it

இந்தியா கோவிட் வைரஸை வெற்றிக்கொண்ட வரலாறு

சீனாவில் உருவான கொரோனா வகையை சேர்ந்த கோவிட் 19 வைரஸ் தொற்றால் கடந்த 2020ம் ஆண்டு இந்த உலகமே முடங்கியது. ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமில்லாமல் மக்கள் இந்த பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சில மாதங்களிலேயே கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த வைரஸ் பரவியது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

திடீரென்று ஏற்பட்ட இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க சரியான மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்து இல்லாததால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் திணறினர். ஒருபக்கம் வைரஸ் தாக்குதல் மற்றோரு பக்கம் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி என நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்தன.

மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் கோவிட் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியது. மருத்துவமனைகளில் போதிய இடமில்லாமல் மருந்துகள் இல்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் மக்கள் தவித்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க உலக நாடுகளுக்கு இருந்த ஒரே வழி கோவிட் வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தான். ஆனால் ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பல வருடங்கள் ஆகும். ஆனால் கோவிட் தொற்றை சமாளிக்க அதை உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. அது என்னவென்றால் வழக்கம் போல் நோய் தடுப்பு மருந்துகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே அதை தயாரிக்க வேண்டும் என்பது தான்.

கோவிட் தடுப்பு மருந்து உருவான கதை

இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து உருவான கதை ஒரு நம்பமுடியாத சாதனையாகும்.

கோவிட் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே அதன் வைரஸை தனிமைப்படுத்தும் முயற்சியில் நம் நாட்டின் பூனே நகரில் உள்ள என்.ஐ.வி எனப்படும் தேசிய வைராலஜி நிறுவனம் தீவிரமாக இறங்கியது. இந்த நிறுவனத்தின் இயக்குனரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் பிரியா ஆப்பிரகாமின் தலைமையிலான குழு கோவிட் 19 வைரஸை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.

அவர்களின் கடுமையான உழைப்பால் இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் ரத்த மாதிரிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது. ஒரு வைரசின் தன்மையை ஆய்வு செய்யவும் தடுப்பு மருந்தை உருவாக்கவும் இதுவே முதல் அடியாகும்.

சீனா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்த முயற்சியில் வெற்றி பெற்ற 5 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்தியாவில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் துவங்கின.

கோவிஷீல்ட்

இந்தியாவில் கோவிட் வைரஸ் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே பூனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் என்ற நிறுவனம் தன் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து கோவிட் வைரஸை தனிமைப்படுத்தி சில மாதங்களிலேயே ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது.

இந்த தடுப்பு மருந்து மீதான அனைத்து கட்ட பரிசோதனைகளும் வெற்றி பெற்றதால் இந்திய அரசும் இந்த கோவிஷீல்ட் மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியது.

கோவேக்சின்

இந்தியாவின் ஐதரபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தேசிய வைராலஜி நிறுவனத்திடம் அனுமதி பெற்று கோவிட் வைரஸை வாங்கி தடுப்பு மருந்துக்கான தன் ஆய்வுகளை துவங்கியது.

மற்ற நாடுகளை போல் அல்லாமல் பாரத் பயோடெக் நிறுவனம் பாரம்பரிய முறையிலேயே கோவிட் வைரஸுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதாவது கோவிட் வைரசின் இறந்த செல்களை கொண்டு இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு கோவேக்சின் என்று பெயரிடப்பட்டது. இதுவே முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பு மருந்தாகும்.

கோவேக்சின் மீதான மனித பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததால் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது.

தடுப்பூசி இயக்கம்

கோவிட் வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்தியா அவசரகால அனுமதி வழங்கியது. கோவிட் தொற்று பரவ துவங்கிய ஒரு வருட காலத்திற்குள்ளாகவே இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரானது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பாரத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

ஆனால் கோவிட் தடுப்பு மருந்துகளை நம் நாட்டின் 130 கோடி மக்களுக்கு கொண்டு செல்வது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

உதாரணமாக இரண்டு தவணைகளாக கொடுக்க வேண்டிய இந்த தடுப்பு மருந்துகளை சரியான கால இடைவெளிக்குள் கொடுக்க வேண்டும். யாரெல்லாம் தடுப்பூசி போட்டவர்கள் போடாதவர்கள் என்பதை சரியாக பதிவு செய்ய வேண்டும். முதல் ஊசி போட்டவர்கள் அடுத்த ஊசியை எப்போது போட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தடுப்பு மருந்துகள் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். இந்தியாவில் போதிய மின்வசதி இல்லாத பகுதிகளில் இதை எப்படி சாத்தியமாக்குவது ?

இந்த சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு விரைவிலேயே தீர்வுகளை கண்டுபிடித்தது. அதில் முக்கியமானது ‘கோவின்’ (CoWin) செயலி. மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமே இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்பதை அறிந்து இந்த கோவின் செயலியை உருவாக்கியது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மொபைல் போன் பயன்பாட்டில் இருந்ததால் கோவின் செயலி மூலம் மக்கள் எங்கு எப்போது தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்த விவரங்களை பதிவு செய்யவும் சான்றிதழ்களை பெறவும் அடுத்த தவணை தடுப்பூசியை எப்போது செலுத்த வேண்டும் போன்ற தகவல்களையும் இந்த செயலி மூலம் பெற முடிந்தது. இந்த திட்டத்திற்கு ஆதார் எண் பெரிதும் உதவியாக இருந்தது.
அதேபோல் தடுப்பு மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரிக்க நாடு முழுவதும் குளிர் சேமிப்பு கிடங்குகள் அதிகரிக்கப்பட்டன. இந்தியாவின் கோட்ரிஜ் நிறுவனம் மின்சாரம் இல்லாத சூழ்நிலையிலும் 72 மணி நேரம் முதல் 4 நாட்கள் வரை தடுப்பு மருந்துகளை சரியான வெப்பநிலையில் பராமரிக்கும் குளிர்சாதன பெட்டியை உருவாக்கியது.

தனால் கோவிட் தடுப்பு மருந்துகளை சரியான வெப்பநிலையில் சுகாதார பணியாளர்களால் அனைத்து பகுதிகளுக்கும் வெற்றிகரமாக எடுத்து செல்ல முடிந்தது.
காடுகள், மலைகள், பாலைவனம் போன்ற போக்குவரத்து வசதி இல்லாத கடுமையான நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு கோவிட் தடுப்பு மருந்துகளை கொண்டு செல்ல சுகாதார பணியாளர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று தடுப்பூசியை செலுத்தினர். பல இடங்களில் தடுப்பூசிகளை சுகாதார பணியாளர்களிடம் கொண்டு சேர்க்க டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்தியாவில் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. அதன் பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு உள்ள பயத்தை போக்கி நம்பிக்கையூட்ட பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

மேலும் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் பயத்தை கைவிட்டு தைரியமாக முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள துவங்கினர். கோவிட் தடுப்பூசி மூலம் நம் நாட்டின் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
ஆனால் கோவிட் தடுப்பூசி இயக்கம் நம் நாட்டுடன் நிற்கவில்லை. இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட துவங்கிய சில வாரங்களிலேயே இந்தியாவிடம் தடுப்பு மருந்து கேட்டு வந்த தென் ஆப்பரிக்கா, செர்பியா, ஜமைக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா கோவிட் தடுப்பு மருந்துகளை வழங்கி உதவியது.
மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் தடுப்பு மருந்துகளுக்கான தேவை அதிகமாக இருந்த நிலையிலும் உற்பத்தியை அதிகரித்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.

இக்கட்டான நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாரத அரசு செய்த இந்த உதவியை உலக நாடுகள் பாராட்டின. இதன்மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக மாறியது. இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயர்ந்து நின்றது.

கோவிட் வைரசுக்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றி பெற காரணமாக இருந்த நம் மத்திய அரசு, சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவரையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் விடா முயற்சி, உண்மையான அர்ப்பணிப்புக்கு இந்த தேசம் என்றென்றும் தலைவணங்கும்.


Share it if you like it