இராமலிங்க அடிகளார் வரலாறு

இராமலிங்க அடிகளார் வரலாறு

Share it if you like it

இராமலிங்க அடிகளார் வரலாறு


நம் புண்ணிய பூமியில் அவதரித்த பல மகான்களில் ஒருவர் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார். இவரை சித்தர்களில் ஒருவராக கருதி மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.
இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் வள்ளலார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதானத்தின் சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியவர்.
சிதம்பரத்துக்கு வடக்கே பத்துக் கல் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இராமலிங்க அடிகளார் அவதரித்தார். தந்தை இராமையாபிள்ளை, தாயார் சின்னம்மை ஆவர். இராமலிங்க அடிகளார் இவர்களது 5 பிள்ளைகளில் இளையவர்.
சிவனடியார் ஒருவரின் ஆசியால் இராமலிங்கர் பிறந்ததாக கூறுவர். ஒருமுறை தாயார் சின்னம்மை, சிவனடியார் ஒருவர் அளித்த திருநீற்றை உண்ட பின் அவருக்கு அருளே வடிவமாய் பிறந்த குழந்தை தான் இராமலிங்கர்.
சின்னமைக்கு திருநீறளித்த சிவயோகி, ‘தாயே உங்களுக்கு அருட்செல்வன் பிறப்பான். அவன் கருணைமிக்கவனாய் விளங்குவான்’ என்று ஆசீர்வதித்துள்ளார். அந்த ஆசியின் பலனாக சிறுவயதிலேயே இராமலிங்க அடிகளாருக்கு ஆன்மீகமும் தமிழ்ப் புலமையும் நிறைந்திருந்தது.
இராமலிங்கரின் தந்தை இராமையா கணக்கராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் இராமலிங்க அடிகளார் பிறந்த 6 மாத காலத்திலேயே அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது.
கணவரின் ஆதரவை இழந்த தாயார் சின்னம்மை தன் குழந்தைகளுடன் சென்னை அருகிலுள்ள பொன்னேரியில் உள்ள தன் தாய் வீடுக்கு சென்றார். பின்னர் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு அவர்கள் அனைவரும் சென்னையில் குடியேறினார்கள்.
மூத்தவரான சிதம்பரம் சபாபதி தமிழ் ஆசிரியரானார். வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தும், வெளியிடங்களில் புராணச் சொற்பொழிவுகள் செய்தும் குடும்பத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்டினார். இதனால் குடும்பம் நல்ல நிலையை அடைந்தது.
ஆனால் இராமலிங்கருக்கோ கல்வி கற்பத்தில் ஆர்வம் இல்லை. சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முருகனைச் சேவித்துப் பாடல்கள் பாடத் தொடங்கினார்.
இதனால் அவரது அண்ணன் சபாபதி தன் குருவான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் இராமலிங்கரை கல்வி கற்க அனுப்பினார். ஆனால் இராமலிங்கருக்கு கல்வியில் ஆர்வமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார். ஒரு முறை கந்தகோட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் இராமலிங்கர் பாடிய பாடலை கேட்ட சபாபதி முதலியார் வியந்து போனார். இராமலிங்கர் சாதாரண குழந்தை இல்லை என்றும் அவருக்கு உலகியல் கல்வி தேவையில்லை என்பதை அறிந்து கொண்ட சபாபதி முதலியார் இராமலிங்கருக்கு பாடம் நடத்த மறுத்துவிட்டார்.
தம்பியின் போக்கை கண்டு கோபமடைந்த அவரது அண்ணன் சபாபதி, அவரை வீட்டில் சேர்க்கவோ, உணவளிக்கவோ கூடாது என்று குடும்பத்தினருக்கு தடை விதித்தார். ஆனால் அண்ணனுக்குத் தெரியாமல் அவரது மனைவி இராமலிங்கருக்கு உணவளிப்பார்.
ஒரு கட்டத்தில் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருக்கு வயது 9.
இராமலிங்கர் படிப்பதற்காக நூல்களையும், எழுது பொருள்களையும் எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைவார். அங்கு கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வார். அப்போது மடை திறந்த வெள்ளமாய் அவருக்குள்ளிருந்து பல பாடல்கள் வெளிப்படும்.
இராமலிங்கருக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் போது ஒருமுறை அவரது அண்ணனுக்கு உடல்நலன் சரியில்லாமல் போனது. அதன் காரணமாக அவரால் ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை.
தன்னால் வரமுடியாத காரணத்தை கூட்டத்தினருக்குத் தெரிவிக்கும் படி இராமலிங்கரை அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சென்ற இராமலிங்கரோ அண்ணனுக்கு பதிலாக ஆன்மீக சொற்பொழிவை நடத்தி விட்டு வந்தார். அங்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலொன்றுக்கு அருமையாய் விளக்கம் அளித்து விட்டுத் திரும்பினார்.
அதன் பிறகே தம்பியின் ஆன்மீக திறன் அவரது அண்ணனுக்குப் புரிந்தது. அன்றுமுதல் இராமலிங்கர் தன் விருப்பப்படி இருக்க அண்ணன் சபாபதி அனுமதி அளித்தார்.
அதன் பிறகு இராமலிங்கர் தன் வீட்டிலேயே தனியறையில் கண்ணாடி முன் அமர்ந்து கற்பூரச் சுடரில் இறைவனை வணங்கி வந்தார்.
திருவொற்றியூர் தியாகேசப் பெருமானிடம் இராமலிங்கர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அடிக்கடி கோயிலிலேயே தியானத்தில் மூழ்கிவிடுவார்.
ஒரு முறை வீட்டுத் திண்ணையில் பசியோடு இருந்த இராமலிங்கரின் பசி தீர்க்க அந்த வடிவுடையம்மையே அவரது அக்காவின் உருவில் வந்து அவருக்கு உணவளித்துச் சென்றார்.
ஆன்மீகத்தில் முழுமையாக மூழ்கி போயிருந்த இராமலிங்கரை இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்த விரும்பிய அவரது அண்ணன், தனம்மாள் என்கிற உறவுக்காரப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால், இராமலிங்கரோ தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை.
அவர் இல்லறத்துறவியாகவே இருந்து வந்தார் வெள்ளை ஆடையே உடுத்தினார். ஆடம்பரங்களை அறவே வெறுத்தார்.
சமத்துவம், கல்வி, தியானம், யோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்பலியை அறவே வெறுத்தார்.
“எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார்.
இராமலிங்க அடிகளார் சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடினார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். நாடு சீரழிவதை தடுக்க குடியை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
இராமலிங்க அடிகளாரின் இந்த கருத்துகள் மிகவும் முற்போக்கு சிந்தனையுடையதாக கருதப்பட்டது. இதனால் இராமலிங்க அடிகளாரை அன்று வாழ்ந்த பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
குறிப்பாக அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த கிறிஸ்துவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளுக்கு இராமலிங்க அடிகளாரின் போதனைகள் தடையாக இருந்ததால் அவர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இந்த எதிர்ப்புகள் இராமலிங்க அடிகளாரை அசைக்க முடியவில்லை.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இராமலிங்க அடிகளாரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்திய ஞான தர்ம சபை” என்ற சபையையும் சத்திய தருமசாலையையும் நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இராமலிங்கரின் சன்மார்க்க கொள்கைகளால் ஈர்கப்பட்ட மக்கள் அவரை ‘வள்ளலார்’ என்று அன்போடு அழைத்தனர்.
இன்றும் வள்ளலார் துவக்கி வைத்த சத்ய தருமசாலை அவரது பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. இந்த தருமசாலைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.
இராமலிங்க சுவாமிகள் தன் வாழ்நாளில் இறைவனை துதித்து பல பாடல்களை பாடினார். முருகன் புகழ் கூறும் ‘தெய்வமணிமாலையே அவர் பாடிய முதல் நூல். அவர் பாடிய மொத்தப் பாடல்கள் நாற்பதாயிரம். அவற்றை அவருடைய பிரதான சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்துப் பதிப்பித்தார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.
இராமலிங்க சுவாமிகளின் கொள்கைகளை கோடிக்கணக்கான மக்கள் இன்று வரை பின்பற்றி வருகிறார்கள். அவர் வடலூரில் துவங்கி வைத்த அறப்பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வடலூரில் உள்ள ஞான சபையில் அவர் அன்று ஏற்றி வைத்த ஜோதி இன்றும் அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக வாழ்ந்து பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டிய இராமலிங்க சுவாமிகள் 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி இரவு வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்து, சில காலம் திறந்து பார்க்க்க வேண்டாமெனச் சீடர்களுக்கு உத்தரவிட்டு வெளியே தாழிடும் படி கூறினார். அதன் பின் அவர் அந்த அறையில் காணப்படவில்லை. அவர் இறைவனுடன் ஜோதி வடிவில் ஒன்று கலந்துவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இன்று வரை அந்த அறை பூட்டப்பட்டே உள்ளது.
வள்ளாரின் சேவைகளை நினைவுக்கூறும் வகையில் கடந்த 2007ல் பாரத அரசு வள்ளலாரின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது.
இராமலிங்க அடிகளார் மதங்களை வெறுத்ததால் அவர் ஒரு இந்து அல்ல என்றும் அவர் மதசார்ப்பற்றவர் என்றும் பல பொய் பிரச்சாரங்கள் இன்று மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இராமலிங்க அடிகளார் மதத்தின் பெயரால் நடக்கும் பிரிவினைகளையும் மூடநம்பிக்கைகளையும் தான் எதிர்த்தாரே தவிர இறை வழிப்பாட்டை எதிர்க்கவில்லை.
வள்ளலார் சிறந்த முருக பக்தர் என்பதற்கு அவர் கந்தகோட்ட முருகனை நினைத்து பாடிய பாடல்களே சான்று. அவர் அன்பையே தெய்வ வடிவாக கண்டார். அதைதான் அவர் மக்களுக்கு போதித்தார். அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி சேவை செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதே அவரது கருத்து.
எனவே வள்ளலாரின் பெயரை வைத்து மத அரசியல் செய்வதை விட்டுவிட்டு இனியாவது அவரது சன்மார்க்க நெறியினை பின்பற்றி சமுதாயத்தை முன்னேற்றி செல்வதில் அரசும் மற்ற அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டும்.


Share it if you like it