ஹோலி பண்டிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் ஹிந்துக்கள் மீது கல்லெறிந்ததில் பலர் படுகாயமடைந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி முதல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வரை ஏராளமானோர் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்திலும் வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌக்கார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், யானைகவுனி, துறைமுகம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை என பல்வேறு மாவட்டங்களிலும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டம் மொஹல்லா சாங்கா தர்வாசாவில் ஹிந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி எழுதப்பட்ட பாடலை பாடியபடி, மத்தளத்தையும் இசைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஹோலி பண்டிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஹிந்துக்கள் மீது திடீரென கற்களை வீசத் தொடங்கினர். இதனால், ஹிந்துக்கள் நிலைகுலைந்து போயினர். இதில், ஹிந்துக்கள் பலரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம்தான் உ.பி.யில் மட்டுமல்லாத நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவரும் பலரும், இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தி ஆர்கனைஸர் வீக்லியும் பதிவு வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்திருக்கும் காவல்துறை, இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வீடியோ மூலம் மற்றவர்களையும் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.