சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
பழைய குடியுரிமை சட்டங்களின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக நுழைந்தவர்கள் 11 ஆண்டுகள் இங்கு வசித்த பிறகே குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும். புதிய சிஏஏ சட்டத்தின்படி இந்த அவகாசம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசால் சிஏஏ அமல்படுத்தப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் அகதிகளாக வசிக்கும் பாகிஸ்தானிய ஹிந்துக்கள் பட்டாசு வெடித்து மேளம் தாளம் வாசித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிஏஏ அமல்படுத்தப்பட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் இருக்கின்ற மத்துவா இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிஏஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நிறைவேறியதை மேளமடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடினர்.
மேலும் இந்த சிஏஏ சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கு அல்ல. இஸ்லாமிய சமூகத்திற்கு இந்த சட்டத்தால் எந்த பிரச்னையும் இல்லை என்றும் இதுகுறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் டெல்லி ஹஜ் கமிட்டி தலைவர் கௌஸர் ஜஹான் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. indiancitizenshiponline.nic.in இந்த இணைய தளத்தில் சென்று மக்கள் விண்ணப்பம் செய்யலாம்.