எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? – உயர்நீதி மன்றம் கேள்வி ?

எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? – உயர்நீதி மன்றம் கேள்வி ?

Share it if you like it

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்.22ம் தேதி, 7 பேர் போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கான்முகமது மீது போதையில் இருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். காவல் துறையினர் ஒத்துழைப்புடன்தான் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருதில்லை.

எனவே, இப்பகுதியில் உள்ள நீலமேக நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடுபவர்கள், மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவை உருவாக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஒத்தக்கடைப் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை. கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல்துறையினரின் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்? என கேள்வி எழுப்பினர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *