ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 22ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.