தாய்மொழியில் சரளமாக படிக்க திணறும் மாணவர்கள் – ஆய்வில் தகவல் !

தாய்மொழியில் சரளமாக படிக்க திணறும் மாணவர்கள் – ஆய்வில் தகவல் !

Share it if you like it

இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கில் ஒரு மாணவர் (25 சதவீதம் பேர்) 2ம் வகுப்பு நிலையில் உள்ள எளிய வாக்கியங்களை கூட தங்கள் சொந்த மொழியில் சரளமாக படிக்க திணறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் கல்வி நிலையை அறியும் பொருட்டு, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ஏ.எஸ்.இ.ஆர்) சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 34,745 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 2017ல் 85.6 சதவீதமாக இருந்த மாணவர்கள் சேர்க்கை, தற்போது 86.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதியினர் 12ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடரவில்லை. 4ல் ஒரு மாணவர் ஆர்வமின்மை காரணமாகவும், 5ல் ஒரு மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிப்பை தொடர முடியவில்லை என்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவரால் 2ம் வகுப்பு நிலையில் இருக்கும் எளிய வாக்கியங்களை கூட தங்கள் சொந்த மொழியில் சரளமாக படிக்க முடியவில்லை. தாய்மொழியில் எளிய வாக்கியங்களை கூட சரளமாக படிக்க முடியாத நிலையில் உள்ளனர். 42.7 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் உள்ள எளிய வாக்கியங்களைப் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.

கணிதப் பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர்; ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 34,745 மாணவர்களில், சுமார் 43.3% பேர் மட்டுமே மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்கும் திறனைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 முதல் 18 வயதுடைய மாணவர்களில் 90 மாணவர்கள் தங்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்; அதில், 43.7 சதவீத மாணவர்கள் மற்றும் 19.8 சதவீத மாணவிகள் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it