தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நிதி முறைகேடு… கணக்கில் வராத ரூ.4,410 கோடி… ஐ.டி. அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நிதி முறைகேடு… கணக்கில் வராத ரூ.4,410 கோடி… ஐ.டி. அதிர்ச்சி தகவல்!

Share it if you like it

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிதி முறைகேடு செய்திருப்பதாகவும், 4,410 கோடி ரூபாய்க்கு முறையாக கணக்குக் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பையும், கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இது ஒரு தனியார் வங்கியாக இருந்தபோதிலும் இவ்வங்கிக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சூழலில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், தமிழகம் மட்டுமல்லாது அவ்வங்கி அமைந்திருக்கும் மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இச்சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4,410 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என்று குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்கள். வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், “தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய்க்கு முறையாக கணக்கு காட்டவில்லை. 500 கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை.

அதேபோல, கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட 110 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை. மேலும், 10,000 வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி ரூபாய் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படத்தின் மையக் கரு இதுதான் என்பதால், இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில், ஆளும்கட்சியைச் சேர்ந்த அதிகாரவர்க்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது.


Share it if you like it