பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கும் நிலையில், மோடியை பார்த்து உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதனால்தான், பி.பி.சி. நிறுவனத்துக்கு ஆதரவாக எந்த நாடுகளும் வாய் திறக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மணி கதறி இருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் மணி. இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பா.ஜ.க.வுக்கு எதிராக தனது வன்மங்களை கக்கி வருகிறார். அந்த வகையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோதே, பா.ஜ.க.வுக்கு எதிராக அவதூறுகளே பரப்பத் தொடங்கினார் மணி. இப்படிப்பட்ட சூழலில், 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததோடு, மீண்டும் மோடியையே பிரதமராக்கி இருப்பதை மணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், தன்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு பா.ஜ.க. மீதான தனது வெறுப்பை உமிழந்து வருகிறார்.
உதாரணமாக, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு, அவரது செயல்பாடுகளை பார்த்து, மணியின் கதறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கி இருக்கிறது. அண்ணாமலை சாதாரணமான ஆள் இல்லை. பயங்கர டேஞ்சரான ஆள். அவரிடம் எதிர்க்கட்சிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.வை பா.ஜ.க. அழிக்க நினைக்கிறது. நிலைமை இப்படியே போனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க. அட்ரஸ் இல்லாமல் போகும். பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து விடும். அதன் பிறகு தமிழகம் அவர்களது கட்டுப்பாட்டுக்குச் சென்று விடும் என்றெல்லாம் கதறினார்.
இந்த சூழலில்தான், தற்போது அந்நிய நாட்டு ஊடகத்துக்கு ஆதரவாகவும், பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எதிராகவும் மீண்டும் கதறி இருக்கிறார் பத்திரிகையாளர் மணி. அதாவது, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிரிட்டன் மீடியாவான பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது. இதில், பாரத பிரதமர் மோடி மீது அவதூறுகளை அள்ளிக் கொட்டி இருக்கிறது. பி.பி.சி.யின் இந்த ஆவணப்படத்துக்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இந்த சூழலில், டெல்லி, மும்பையிலுள்ள பி.பி.சி. அலுவலகங்களில் கடந்த 14-ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதில், பி.பி.சி. வரி கட்டாததும், முறைகேடுகள் செய்திருப்பதும் அம்பலமாகி இருக்கும் நிலையில், இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மணி, “பி.பி.சி. தொலைக்காட்சிக்கு ஆதரவாக எந்தவொரு வெளிநாட்டு தலைவர்களும் குரல்கொடுக்கவில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். ஏனெனில், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மோடியைப் பார்த்து அஞ்சுகிறார்கள். மோடியை தங்களது நண்பராக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள். காரணம், இந்தியாவால் அவர்கள் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.
இந்திய ஊடகங்களைப் போல வெளிநாட்டு ஊடகங்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறார் மோடி. இதில் அவர் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பி.பி.சி. மீது ரெய்டு வரும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். இதற்கு எதிராகவும், பி.பி.சி.க்கு ஆதரவாகவும் பிரிட்டன் அரசு களமிறங்கும். கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பிரிட்டன் அரசு வாயை திறக்கவில்லை. இதுதான் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. இதே பெய்ஜிங்கிலோ அல்லது மாஸ்கோவிலோ நடந்திருந்தால் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக பொங்கி எழுந்திருப்பார்கள். தற்போது யாரும் வாயை திறக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிநாட்டு ஊடகங்களை பகைத்துக் கொண்டால் வாழ முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோடி எதற்கும் கவலைப்படவில்லை, தெரிந்தே இந்த விளையாட்டை விளையாடுகிறார். உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு ஆகப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை 10 முதல் 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாகக் கூட இந்தியா வாக்களிக்கவில்லை” என்று கூறி பி.பி.சி. ஊடகம் தொடர்பான பேட்டியில், சம்பந்தமில்லாமல் உக்ரைன் போரை கொண்டு வந்து, தனது வன்மத்தைக் காட்டி இருக்கிறார் மணி.
இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் மணியின் கதறலை பார்த்து ரசித்து வருகிறார்கள்.