இந்தியாவிடம் சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க் இருக்கிறது. உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும் என்று பில்கேட்ஸ் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவராவார். 67 வயதான இவர் கடந்த 1995 முதல் 2017-ம் ஆண்டு வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதன் காரணமாக, உலகம் முழுவதும் அறியப்படும் செல்வாக்கு மிக்க நபராக பில்கேட்ஸ் திகழ்கிறார். தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் பில்கேட்ஸ், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், ஜி20 மாநாடு தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பில்கேட்ஸ் இந்தியா சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க்கை கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பில்கேட்ஸ் மேலும் பேசுகையில், “சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க்கை இந்தியா கொண்டிருக்கிறது. இது அற்புதமான விஷயமாகும். இங்கு ஸ்மார்ட்போன் பயனர்களின் சதவீதம் அதிகம். இங்கு இணைய இணைப்பு அபாரமாக உள்ளது. இது மலிவான விலையிலும் கிடைக்கிறது. இதேதான் 5ஜி சேவையிலும் தொடரும் என்று கருதுகிறேன். உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும் என்பதில் எனக்கு துளிக்கூட சந்தேகம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.