முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வி.வி.ஐ.பி.க்களுக்காக ஹெலிகாப்டர் வாங்கிய 3,600 கோடி ரூபாய் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 555.262 மில்லியன் யூரோ மதிப்பில் 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை ஏற்றி செல்வதற்காக வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 3,600 கோடி ரூபாயாகும். இந்த சூழலில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்குச் சாதகமாக அசல் ஒப்பந்தத்தில் இருந்து ஹெலிகாப்டர் விவர குறிப்புகள் மாற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் பல காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டதால், இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, மேற்படி ஒப்பந்தத்தை எளிதாக முடிப்பதற்கு லஞ்சம் பெற்றதாக துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சில இடைத்தரகர்களை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு 2,666 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது. இந்த நிலையில்தான், மேற்படி வழக்கில் ஜூலை 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 முன்னாள் அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.