உகாண்டா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தற்போது இருப்பது வேறு மாதிரியான இந்தியா. யாராவது வாலாட்ட நினைத்தால் அவ்வளவுதான் என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
பாகிஸ்தானும், சீனாவும் இந்திய எல்லையில் அவ்வப்போது வாலாட்டி வருகின்றன. பாகிஸ்தான் உரி மற்றும் பால்கோட் உள்ளிட்ட தாக்குதல்ளை நடத்தியது. அதேபோல, சீனா அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதிகளில் அத்துமீறியது. இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, உகாண்டாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கு எதிராக பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதை அன்றைய இந்தியா பொறுத்துக் கொண்டது. ஆனால், இது வேறு மாதிரியான இந்தியா. இந்த இந்தியா எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.
கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பந்தத்தை மீறி சீனா பெரிய படைகளை கொண்டு வந்திருக்கிறது. இன்று இந்திய ராணுவம் மிக உயரத்திலும், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை கடந்த காலத்திலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இந்திய வீரர்களுக்கு இப்போது முழு ஆதரவு இருக்கிறது. அதோடு, அவர்களிடம் தக்க உபகரணங்களும், உள்கட்டமைப்பும் இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான இந்தியா. இதன் நலன்களுக்காக நிற்கும், உலகம் அதை அங்கீகரிக்கும். இன்று, இந்தியாவின் கொள்கைகள் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதில்லை. எங்கே எண்ணெய் வாங்க வேண்டும், எங்கு எண்ணெய் வாங்கக்கூடாது என்று சொல்லும் நாடுகளால் இன்று இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இந்தியா தனது குடிமக்கள், அதன் நுகர்வோர் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்” என்று பேசியிருக்கிறார்.
அதாவது, இந்தியா பழைய இந்தியா அல்ல, எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்று பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.