சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதத்தின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். ஐநா சபையில் 17 நிமிடங்கள் உரையாற்றிய ஜெய்சங்கர் கொரோனா முடக்கம் காரணமாக உலக அளவில் நிகழ்ந்த பொருளாதார முடக்கங்கள். அதிலிருந்து மீண்டு வரும் சமகால அரசியல் பொருளாதாரம் காரணிகளின் மாற்றங்கள் குறித்து விரிவாக பேசினார். சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவம் சுற்றுச்சூழல் எரிவாயு எரிபொருட்கள் பங்கீடு என்று பல்வேறு விஷயங்களுக்கும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டி இருப்பதன் சமகால அவசியத்தையும் எடுத்துரைத்தார் . மேலும் சமீபத்தில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு புது தில்லியில் பாரதத்தின் தலைமையில் நடைபெற்றது . பிரதமர் மோடி தலைமையேற்று அதை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தது உலகளாவிய பொருளாதார பங்களிப்பிற்கும் வர்த்தகத்திற்கும் கண்டங்களை இணைக்கும் சாலை போக்குவரத்து திட்டத்தை பாரதம் ஜி 20 நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு திட்டமாக முன்மொழிந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அதனால் எதிர்காலத்தில் உலகம் பெற இருக்கும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் முன்னெடுக்கப்பட்ட முடிவுகள் அதன் மூலம் உலக நலனுக்கு பாரதம் வழங்க தயாராக இருக்கும் பங்களிப்புகள் பற்றி எல்லாம் பெருமிதத்தோடு ஜெய்சங்கர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பாரதத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாரதத்தின் வெளியுறவுத்துறை என்ற அடையாளத்தோடு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். தனது உரையை நிகழ்த்தும் போதும் பாரதத்தின் வணக்கம் என்று தனது உரையை தொடங்கி இருக்கிறார். பாரதம் என்று தனது உரையை முடிவு செய்தும் இருக்கிறார். இதன் மூலம் பாரதத்தின் பாரம்பரியமான பெயரான பாரதம் என்பதை சர்வதேச அரங்கில் மோடி அரசு ஆவணபூர்வமாக நிலை நிறுத்தி இருக்கிறது.
ஜி 20 மாநாடுகளில் பங்கேற்கும் மேடையிலேயே அந்த அமர்வில் மோடி பாரதம் என்ற அடையாளம் கொண்டே முன்னிலைப்படுத்தப்பட்டார் .சர்வதேச தலைவர்களுக்காக ஜி 20 மாநாட்டில் பாரதத்தின் குடியரசு தலைவர் வழங்கிய சிறப்பு விருந்தோம்பல் உபசரிப்பிலும் பாரதத்தின் குடியரசு தலைவரின் விருந்தோம்பல் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று சர்வதேச நாடுகளின் மற்றொரு அமர்வான ஐக்கிய நாட்டு சபையின் பொது குழுவிலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாரத வெளியுறவுத்துறை என்று அதிகாரப்பூர்வமாக நிலை நிறுத்தி இருக்கிறார். பாரதத்தின் வணக்கம் பாரதத்தின் நன்றி என்று தனது உரையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
மோடி அரசு தேசத்தின் பெயரை மாற்றி வைத்து விளையாடுகிறது. அதன் மூலம் வரலாற்று திரிபுகளை சொல்லி மலிவான அரசியல் செய்கிறது என்று கடந்த மாதம் ஒரு பெரும் அரசியல் சர்ச்சை எழுந்தது. ஆனால் பாரதம் என்பது தான் ஹிந்துஸ்தானத்தின் அரசியல் அடையாளம். அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் பாரதம் என்ற அடையாளத்தோடு இந்த நாட்டை குறிப்பிட்டு இருக்கிறது.ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து எதிர்க்கட்சிகள் தங்களின் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக ஐ என் டிஐ ஏ என்ற கூட்டமைப்பை உருவாக்கியதால் பயந்து போன மோடி அரசு நாட்டின் பெயரை மாற்றி அமைக்க துணிந்து விட்டதாக மலிவான அரசியல் செய்தது.
அப்போதே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்திலேயே இந்த தேசத்தை பாரதம் ஜனநாயகத்தின் தாயகம் என்ற ரீதியில் தான் அடையாளப்படுத்தி இருக்கிறது .சந்தேகம் இருப்பவர்கள் பார்த்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும். தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளிலும் பாரதம் என்று குறிப்பிட்டு பேசுவதையே அவரும் தனது வழக்கத்தில் பின்பற்றி வந்தார். இன்று உலக நாடுகள் மத்தியில் பாரதம் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக பிரகடனமும் செய்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை ஆணவத்தில் மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது. தேசத்தின் பெயரை மாற்றி வைத்து விளையாடுகிறது என்ற மலிவான அரசியல் எல்லாம் தவிடு பொடியாகி பாரதம் என்ற பெயரில் தேசம் மீண்டும் தனது பாரம்பரிய பெயரையும் அடையாளத்தையும் மீட்டெடுத்திருக்கிறது. எதிர் கட்சிகள் புலம்பும் ஐஎன்டிஐஏ கூட்டணி என்ற பெயரும் அதன் விளக்கமும் தான் மலிவான அரசியல் தவிர பாரதம் என்ற பெயர் மாற்றம் அரசியல் அல்ல . உண்மையில் அது பெயர் மாற்றம் அல்ல. ஒரு வரலாற்று மீட்பு மட்டுமே என்பதை மூடி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் உலக நாடுகளுக்கு சப்தமின்றி உணர்த்தி இருக்கிறது.
பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்று எழுதி வைத்த பாடல் வரிகளை இங்குள்ள அரசியல்வாதிகள் மறந்து போகலாம். எங்கள் பாரத தேசமென்று தோள் தட்டுவோம் என்று பாரதி பாடிய வரிகளை இருட்டடிப்பு செய்து விடலாம். ஆனால் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் வரலாற்று குறிப்புகள் பயணக் கட்டுரைகள் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் தொகுப்புகள் அனைத்திலும் இந்த தேசம் பாரதம் என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அல்லது ஹிந்துஸ்தானம் என்றே குறிக்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை மலிவான அரசியல் காரணங்களுக்காக உள்நாட்டில் அரசியல் கட்சிகளும் எதிர் கட்சிகளும் மறைத்து விஷமப் பிரச்சாரம் செய்யலாம் .ஆனால் அந்தந்த நாடுகளில் இருக்கும் வரலாற்று ஆவணங்கள் பயணக் குறிப்புகள் யாத்திரிகர்களின் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை இன்றளவும் ஆவணமாக பயன்படுத்தி வரும் அதன் அடிப்படையில் இயங்கும் சர்வதேச நாடுகள் யாரும் இதுவரையில் பாரதம் என்ற பெயர் மாற்றம் பற்றி விமர்சனமும் செய்யவில்லை. அது பெயர் மாற்றம் என்ற வகையில் கூட யாரும் குறிப்பிடவில்லை.
இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற தயாராகிறது மோடி அரசு அதை எதிர்க்க வேண்டும் தடுக்க வேண்டும் என்று உள்ளூரில் வெற்றுக் கூச்சல் போடும் அரசியல்வாதிகள் யாருக்கும் உலக அரங்கில் இந்த தேசம் பாரதம் என்று அதிகாரப்பூர்வமாக போய் சேர்ந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாது. காரணம் எந்த ஒரு தீர்மானம் வரைவை கொண்டு வந்து மோடி அரசு பாரதம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .இந்த தேசத்தின் சுதந்திர கால அரசியல் சாசன சட்டத்திலேயே இந்த மாபாரத பூமி பாரதம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .அதன் வரலாற்றுப் பெயரும் பாரம்பரிய அடையாளத்தின் வழியில் தான் தேசம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் அதை இருட்டடிப்பு செய்து பிரிட்டிஷாரின் வழியில் இந்தியா என்றே குறிப்பிட்டார்கள். பாரம்பரிய வழியில் சனாதன தர்மத்தின் வழியில் வந்த மோடி அரசு அதை புறந்தள்ளி பாரதம் என்ற வரலாற்று பாரம்பரியத்தை மீட்டெடுத்திருக்கிறது. இதை உணர்ந்து கொண்டதால்தான் உலக நாடுகள் பாரதம் என்ற பெயரையும் அதை முன்மொழிந்த மோடி அரசையும் எந்த கேள்வியும் விமர்சனம் இன்றி முழு மனதோடு சுவீகரிக்கிறது.