முதல் உள்நாட்டுத் தயாரிப்பு விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், நேற்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நமது பாரத தேசத்தின் கடற்படைக்கு, 1961-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டிடம் இருந்து, முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் வாங்கப்பட்டது. இதற்கு, ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்டது. இப்போர் கப்பல்தான் 1971-ம் ஆண்டு, நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் முக்கியப் பங்காற்றியது. இக்கப்பல் 1997-ம் ஆண்டு படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதன் பிறகு, 2013-ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து 17,500 கோடி ரூபாய் செலவில், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்கிற விமானம் தாங்கி போர்க் கப்பல் வாங்கப்பட்டது. தற்போதுவரை நமது கடற்படையில் இருக்கும் ஒரே விமானம் தாங்கி போர்க் கப்பல் இதுதான்.
இந்த நிலையில்தான், விமானம் தாங்கி போர்க் கப்பலை முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 23,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில், இக்கப்பல் கட்டும் பணி தொடங்கியது. ஆத்மநிர்பர் பாரத் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் உருவாக்கப்பட்ட இக்கப்பலுக்கு, முதல் விமானம் தாங்கி கப்பல் நினைவாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
45,000 டன் எடையோடு 262 மீட்டர் நீளமுள்ளது இக்கப்பல். இக்கப்பலின் முதல் சோதனை ஓட்டம் 2021-ல் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து, சமீபத்தில் இரண்டாவது சோதனை ஓட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த விமானம் தாங்கி போர்க் கப்பல் இந்திய கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய நிலையை மேம்படுத்தும் பணியில் இது ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.