இந்தியாவில் 2-வது முறையாக ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!

இந்தியாவில் 2-வது முறையாக ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!

Share it if you like it

இந்தியாவில் 2-வது முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) கூட்டம் நடைபெறவிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டம் இந்தியாவில் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் முதல்முறையாக 1894-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இக்கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில், 86-வது கூட்டம் இந்தியாவில் 1983-ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு, கடந்த 40 ஆண்டுகளாக இக்கூட்டம் இந்தியாவில் நடைபெறவில்லை. இந்த நிலையில், நிகழாண்டுக்கான 139-வது கூட்டம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் இந்திய சார்பில் பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்தரா, ஐ.ஓ.சி. உறுப்பினர் நீடா அம்பானி, ஐ.ஓ.ஏ. தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்தான், அடுத்த ஆண்டுக்கான (2023) கூட்டத்தை இந்தியாவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 140-வது கூட்டம் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மும்பை நகரத்தில் நடக்கவிருக்கிறது. அதாவது, இந்தியாவில் நடக்கும் 2-வது கூட்டம் இதுவாகும். இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2023-ல் இந்தியாவுக்கு வரவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் வரலாற்றுத் தருணம். சமீபத்திய ஆண்டுகளில் இந்திய விளையாட்டு மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. இச்சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார்.

அதேபோல, இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி. உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீடா அம்பானி, “40 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒலிம்பிக் இயக்கம் இந்தியாவுக்குத் திரும்பி இருக்கிறது. 2023-ல் ஐ.ஓ.சி. மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்க்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it