உலக அரங்கில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது – குளோபல் டைம்ஸ் !

உலக அரங்கில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது – குளோபல் டைம்ஸ் !

Share it if you like it

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு நிலைமை மிக மோசமாக மாறியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் இந்தியாவைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கை மற்றும் தனித்துவமான பாரதத்தை வடிவமைப்பதில் முனைப்பான அணுகுமுறையை குளோபல் டைம்ஸ் பாராட்டியுள்ளது. சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குநரான ஜாங் ஜியாடோங் எழுதிய இந்த கட்டுரை ஜன.2ஆம் தேதி வெளியானது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கச் சாதனைகளைச் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் அடைந்த முன்னேற்றம் மற்றும் சர்வதேச உறவுகள், குறிப்பாகச் சீனாவுடனான அணுகுமுறையில் மாற்றம் ஆகியவை குறித்தும் ஜாக் அந்த கட்டுரையில் விவரித்துள்ளார். அந்த கட்டுரையில், “ஒருபுறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நிர்வாகத்தில் ஆகியவற்றில் இந்தியா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் பொருளாதாரம் வேகம் பெற்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.

உதாரணமாக, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை எடுத்துக் கொள்வோம். முன்பெல்லாம்​​ இந்தியப் பிரதிநிதிகள் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைக்கச் சீனாவின் நடவடிக்கைகளில் முதன்மையாகக் கவனம் செலுத்தினர். ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவின் ஏற்றுமதி திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் மேற்குலக நாடுகளுடனான தனது ஜனநாயக ஒருமித்த கருத்தை வலியுறுத்தும் இடத்தில் இருந்து இந்தியா தன்னை முன்னிலைப்படுத்தும் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தியாவின்​​ ஜனநாயக அரசியலுக்குச் சர்வதேச அரங்கில் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மோதலில் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பல-சீரமைப்பு திட்டங்களும் இந்தியாவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தும் வகையில், பல சீரமைப்பு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்தியா எப்போதுமே தன்னை ஒரு உலக வல்லரசாகக் கருதுகிறது. இருப்பினும், இந்தியா அந்த நிலையை நோக்கி நகர ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது, இவ்வளவு வேகமாக மாற்றம் நடப்பது அரிதாகவே காணப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக மாறும் என்பதை ஏற்றுக் கொண்ட ஜாங், வலிமையான, மேலும் உறுதியான இந்தியா பல நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு புதிய புவிசார் அரசியல் சக்தியாக மாறியுள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it