இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் இருக்கிறார்கள் என்று நெத்தியடியாக பதிலளித்திருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அமெரிக்கா சென்றிருக்கிறார். தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு, அதன் தலைவர் ஆதம் எஸ்.போசென் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதாக வெளியாகும் செய்திகளுக்கு என்ன பதில்? என்கிற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், “இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா. இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நீங்கள் கூறுவது உண்மை என்றால், 1947-ல் இருந்ததைவிட தற்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் எவ்வாறு உயர்ந்திருக்க முடியும்? பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள். சிறப்பாக தொழில் செய்கிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்களின் கல்விக்காக இந்திய அரசும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. 2014-ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகான காலத்தை எடுத்துக்கொண்டால்கூட, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதா? இந்தியா குறித்து கருத்துருவாக்கம் செய்பவர்களை நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தியாவுக்கு வந்து நேரில் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதுதான்” என்று நெத்தியடியாக பதில் கூறியிருக்கிறார்.