உலக குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த இந்தியா

உலக குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த இந்தியா

Share it if you like it

உலக குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த இந்தியா

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பல இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்களில் நீத்து கங்காஸ், சவீட்டி பூரா, நிகத் ஜரீன் மற்றும் லோவ்லீனா ஆகிய 4 வீராங்கனைகள் படிப்படியாக இறுதி சுற்றுக்கு முன்னேறினார்கள். இதனால் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதியானது.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நீத்து கங்காஸ் 48 எடை பிரிவிலும், சவீட்டி பூரா 81 கிலோ எடை பிரிவிலும் இறுதி சுற்றில் வென்று தங்க பதக்கங்களை வென்றனர்.

அவர்களை தொடர்ந்து 50 கிலோ லைட் ஃப்ளை வெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன், இறுது சுற்றில் வியட்நாமின் குயென் தி டாமை தோற்கடித்து இந்தியாவுக்காக மூன்றாவது தங்கத்தை வென்றார். இந்த வெற்றி மூலம் 26 வயதான நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் பிரபல குத்துசண்டை வீராங்கனையான மேரி கோமிற்குப் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட உலகப் பட்டங்களை வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இறுதியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற மிடில்வெயிட் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கரை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இந்தியாவின் நான்காவது தங்கத்தை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லோவ்லினாவின் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

உலக குத்துச்சண்டை போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆண் வீரர்கள் யாரும் இதுவரை தங்க பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்போது பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தங்க பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா குத்துச்சண்டை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

பெண்களுக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ரஷ்யா, சீனா மற்றும் துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஆண்களுக்கான இடமாகவே மட்டுமே இருந்து வந்த குத்துச்சண்டை போட்டியில் பெண்களும் சாதனை படைக்க முடியும் என்பதை இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தன் தொடர் வெற்றிகளால் நிரூபித்தார்.

அவரது வெற்றியால் இந்தியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் புதிய உத்வேகம் பெற்றது. பல பெண்கள் துணிச்சலுடன் குத்துச்சண்டை களத்தில் இறங்கினர். அதன் விளைவாகவே தற்போது நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.
ஒரு வெண்கல பதக்கம் கிடைத்தாலும் போதும் என்ற மனநிலையில் இருந்த இந்திய விளையாட்டுத்துறை இப்போது தங்க பதக்கங்களை மட்டுமே இலக்காக கொண்டு முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்த பல விளையாட்டுகளில் தற்போது பெண்களும் வெற்றிகரமாக ஈடுபட்டு ஆண்களுக்கு இணையாக வெற்றிகளை தேடி கொடுக்கிறார்கள்.

மத்திய பாஜக அரசும் இந்திய விளையாட்டுத்துறையை முன்னேற்ற கேலோ இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.

இதன் விளைவாக சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பின் தங்கி வந்த இந்தியா தற்போது மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. தற்போது உலக குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி இதற்கு சிறந்த உதாரணம்.


Share it if you like it