நிகழாண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச் சந்தையில் இருந்த தங்களது பணத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்து வந்தனர். இதனால், பங்குச்சந்தை தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 6 நாட்களில் 7,000 கோடி ரூபாய் அளவிற்கு மீண்டும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை, உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இணையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தீர்மானித்து வருகின்றனர். இந்த சூழலில், வட்டி விகித உயர்வும், அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எஃப்.ஐ.ஐ.க்கள் விற்பனையைத் தொடங்கினார்கள். நிகழாண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை சமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் நிறுவன பங்குகளை விற்று விட்டார்கள். இதனால், பங்குச்சந்தை சிறிது தடுமாற்றத்தை சந்தித்தது. எனினும், உள்நாட்டவர்களும் பங்குச்சந்தையில் நேரடியாக தங்களது பணத்தை முதலீடு செய்ததால், பங்குச்சந்தை பெரிதாக சரிவை சந்திக்காமல் இருந்தது.
இந்த நிலையில்தான், பிப்ரவரி 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி இருப்பதாக என்.எஸ்.டி.எல். எனும் தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் இன்னமும் பணவீக்கம் தொடர்பான அழுத்தங்கள் இருந்து வருகின்றன. ஜனவரி மாதத்திற்கான அமெரிக்க உற்பத்தியாளர் விலை குறியீடுகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளன. இதனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பி இருக்கிறார்கள். மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மேக்ரோ பொருளாதார நிலை வலுவானதாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-ம் நிதியாண்டில் 7% வளரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். மூலதன செலவினங்களை இரட்டிப்பாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது, நிதி ஒழுங்கை ஏற்படுத்துவது போன்றவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை செயல்பாட்டுக்கு வந்தால் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும். தற்போது இருக்கும் இந்தியப் பங்குச்சந்தையின் மதிப்பே அதிகம் என்று சிலர் கூறினாலும், வேல்யூவேஷனை விட அதிக பொருளாதார வளர்ச்சியை முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். இது இங்கு சாத்தியம் என்று நம்பியே, அவர்கள் பணத்தை முதலீடு செய்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.