இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி அவானி!

இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி அவானி!

Share it if you like it

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாக அவானி சதுர்வேதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் இருந்து எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். இதன் மூலம் போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னாவைச் சேர்ந்தவர் அவானி சதுர்வேதி. 1993-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை தின்கர் சதுர்வேதி, மத்திய பிரதேச அரசின் நீர்வள மேம்பாட்டுத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவானியின் மூத்த சகோதரரும் ராணுவ அதிகாரிதான்.

மத்தியப் பிரதேசத்தின் டியிலாண்ட் பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்த அவானி, ராஜஸ்தானில் உள்ள பானஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே பிளையிங் கிளப்பில் சேர்ந்தவர், அங்குதான் முதலில் விமானத்தில் பறப்பதற்கான அனுபவத்தைப் பெற்றார். பின்னர், 2014-ம் ஆண்டு விமானப் படையில் சேர்வதற்கான ஏ.எஃப்.சி.ஏ.டி. தேர்வை எழுதினார். இதில், மெரிட் லிஸ்டில் 2-ம் இடம் பிடித்தார். இந்திய விமானப்படையின் போர் விமானிகளாக பொறுப்பேற்ற 3 பெண்களில் இவரும் ஒருவர். பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய இருவருடன் அவானி சதுர்வேதியும் கடந்தாண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள விமானப் படைப் பயிற்சி மையத்தில் அவருக்கு பிரத்யேகமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவானிக்கு செஸ், டேபிள் டென்னிஸ் விளையாட பிடிக்கும். பெயின்டிங் வரைவதில் ஆர்வமுடையவர். ஐதராபாத் நகரிலுள்ள விமானப்படை அகடாமியில் ஜனவரி 2015-ம் ஆண்டு முதல் ஓராண்டு பயிற்சியை முடித்தார். போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார். பிப்ரவரி 22-ம் தேதி முதல் விமானப்படையில் தனது பணியை தொடங்கி இருக்கிறார்.


Share it if you like it