இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, உலகின் மிகப்பெரிய நாடுகளைக் காட்டியிலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2022 – 23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு எடுத்திருக்கும் பல்வேறு முயற்சிகளால் உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில் இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு நடப்பு நிதியாண்டு பொருளாதார மீட்சியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை வளர்ச்சிதான் முக்கியக் காரணமாக இருக்கும். விவசாயத்தை பொறுத்தவரை, நிகர விதைப்பு பரப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், உணவுப் பொருட்கள் இருப்பும் அதிகரிக்கும்.
ஆகவே, 2020 – 21-ம் நிதியாண்டில் மைனஸ் 6.6 சதவிகிதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2022 – 23-ம் நிதியாண்டில் மிக வேகமான வளர்ச்சியை எட்டும். கொரோனா தொடர்பான கவலையும், நிச்சயமற்ற நிலையும் மக்கள் மனதிலிருந்து நீங்கும்பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கத் துவங்கும். இதனால், தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கும். குறிப்பாக, புவிசார் அரசியல் உள்ளிட்ட வேறு பாதிப்புகள் ஏற்படாதபட்சத்தில் இந்திய பொருளாதாரம் ஏற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.