தியாகி செந்தில் பெருமாள்
(07.06.1896 – 11.06.1961)
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பேரூர் கிராமத்தில் தளவாய் சாமித் தேவருக்கும் – பத்ர காளியம்மாளுக்கும், 1896 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார், செந்தில்பெருமாள்.
தனது இளமைப் பருவம் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பலருக்கும் வழி காட்டியவர்.
1940 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் ஆணைப் படி, ஸ்ரீ வைகுண்டத்தில் சத்தியாகிரகம் செய்து, சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
1941-ஆம் ஆண்டு, ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவிலுள்ள ஆறுமுக நேரியில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு சத்தியாகிரகத்தில், காங்கிரஸ் கொடியுடன் கோஷமிட்டு, சத்தியாகிரகம் செய்தார்.
1942 ஆம் ஆண்டு, தனிநபர் சட்ட மறுப்பு இயக்கத்தில், திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டு தாலுகாக்களுக்கும் பாத யாத்திரை செய்து, பின்னர் சென்னை சென்று கைதாகி பெல்லாரி, அலிப்புரம் சிறையில் பல மாதங்கள் தண்டனை அனுபவித்தார்.
காந்திஜி அவர்கள் தமிழகம் வந்த போது, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் பேரூரில், செந்தில் பெருமாள் அவர்களின் வரவேற்புக்கு இணங்கி, சில வினாடிகள் தங்கிச் சென்றார்கள். அது சமயம் செந்தில் பெருமாள் ரூ.3000/- பண முடிப்பை, சுதந்திரப் போராட்ட நிதிக்காக, காந்திஜியிடம் கொடுத்தார். இதனை காந்திஜி, தன்னுடைய நாட்குறிப்பில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பூமி தான இயக்கத்தில் இணைந்து, தன்னுடைய சொந்த நிலத்தை, நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு, தானமாகக் கொடுத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரருக்காக, தியாகி பென்ஷன் கொடுக்க, அரசு முன் வந்த போது, அதனை வாங்க மறுத்தார்.
1961 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 11 ஆம் தேதி, தனது 64வது வயதில் அமரரானார்.