இந்திய சட்ட ஆணையத்தின் காலத்தை 2024 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து, பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
21-வது சட்ட ஆணையத்தின் காலம் 2018 ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், 22-வது சட்ட ஆணையம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதன் பிறகு, 2020-ம் ஆண்டு 22-வது சட்ட ஆணையம் அமைப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. எனினும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு இல்லை. இந்த சூழலில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்தாண்டு நவம்பர் மாதம் 22-வது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
இந்த ஆணையத்தின் தலைவராக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியும், உறுப்பினர்களாக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா, ரக ஆர்யா மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞருமான எம்.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த ஆணையத்தின் காலம் 2023 பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இவ்வாணையத்தின் நிர்வாகிகள் பதவியேற்று குறுகிய காலமே ஆகியிருக்கும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 22-வது இந்திய சட்ட ஆணையத்தின் காலத்தை 2024 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து ஒப்புதல் அளித்திருக்கிறது.