இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக இந்திய கடற்படை தளபதி அடமிரல் ஹரிகுமார் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அட்மிரல் ஹரிகுமார், “பாகிஸ்தான் துறைமுகங்களில் சீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை இந்தியா நன்கு அறியும். இதை இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் தனது கடற்படையை வேகமாக நவீனமயமாக்கி வருகிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் புதிய போர்க் கப்பல்களை சேர்க்க இருப்பதும் இந்தியாவுக்கு தெரியும். அதேபோல, சீனா கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை அந்நாடு கடற்படையில் இணைத்திருக்கிறது.
அதேசமயம், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. எப்போதும் 3 முதல் 6 கப்பல்களின் நடமாட்டம் இருந்து 6 கொண்டே இருக்கிறது. 2 முதல் 4 சீன ஆய்வு கப்பல்களும், மீன்பிடிக் கப்பல்களும் எப்போதும் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும், இந்திய கடற்படை விமானங்கள், ஆளில்லா விமானங்கள், கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இந்திய எலக்ட்ரானிக் சமிக்ஞைகளை கண்காணிக்க சீன ஆய்வுக் கப்பல்களில் தொழில்நுட்பத் திறன் உள்ளது. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில் அவை ஆய்வில் ஈடுபடும்போது இந்தியா கடற்படை உன்னிப்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.