போர் விமானம் விபத்து: 2 வீரர்கள் உயிரிழப்பு!

போர் விமானம் விபத்து: 2 வீரர்கள் உயிரிழப்பு!

Share it if you like it

இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் உட்லாய் விமான தளத்தில் இருந்து, இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம், நேற்று மாலை பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்றிரவு 9.10 மணியளவில் திடீரென பிம்தா என்ற கிராமத்தின் அருகே விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து உள்ளுர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அப்போது, ஒரு தீப் பந்தம் தரையில் விழுந்ததுபோல் இருந்ததாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார்கள். மேலும், சம்பவ இடத்தில் விமானம் கொழுந்து விட்டு எரியும் காட்சிகளை லோக்கல் பொதுமக்களும், போலீஸாரும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இதனிடையே, ராணுவத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ராணுவத்தினரும், லோக்கல் போலீஸாரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். விமானத்தில் ஒரு விமானியும், ஒரு பயிற்சி விமானியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரியை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். பின்னர், சம்பவத்தில் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்த ராஜ்நாத் சிங், இருவரும் நாட்டிற்கு ஆற்றிய சேவை என்றும் மறவாமல் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார். மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதேபோல, மத்திய அமைச்சரும், பார்மரின் மக்களவை எம்.பி.யுமான கைலாஷ் சவுத்ரி, விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு இன்று தனது இரு மகன்களை இழந்திருக்கிறது. தீயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய விமானப் படையில் இந்த மிக் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விமான விபத்தில் 42 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சோவியத் ரஷ்யா காலத்து விமானமான, இந்த மிக் ரக விமான பயன்பாட்டை விரைவில் நிறுத்தி நவீன ரக விமான பயன்பாட்டிற்கு மாற இந்திய விமானப் படை தீவிரம் காட்டி வருகிறது.


Share it if you like it