பீகாரை போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியிருப்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இணைந்து, அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் அதே பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதிகாரப்பூர்வமாக தி.மு.க. எம்.பி.யாக இருந்தாலும், கொள்கை அடிப்படையில் அக்கட்சியுடன் ஒத்துப்போகாதவர். இதனால். சில சமயங்களில் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில்தான், பீகாரை போல தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். இது தற்போது கடுமையான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதாவது, பாரிவேந்தரின் பிறந்தநாள் விழா, சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாரிவேந்தர், “ஒரு சிறந்த அரசியல் கட்சிக்கு அடையாளம் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒழுக்கமாக இருப்பதுதான். அப்போதுதான் அக்கட்சி உயர்ந்த நிலையை அடைய முடியும். ஆகவே, அப்படியொரு ஒழுக்கத்தை இந்திய ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களாகிய உங்களிடம் எதிர்பார்க்கிறேன். லட்சக்கணக்கான ஒழுக்கமற்ற தொண்டர்களை விட, சில நூறு ஒழுக்கமான தொண்டர்கள் இருந்தாலே போதும். நமது கட்சித் தொண்டர்களின் 11 வருட உழைப்பு வீணாகி விடக்கூடாது. எனவே, கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தொண்டர்களாகிய நீங்கள் கட்சிப் பணியாற்ற வேண்டும். கட்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் இருந்து திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் நமது இந்திய ஜனநாயகக் கட்சி. குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் கூடாது. ஆகவே, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல், தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப ஆட்சி என்பது எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆகிய பதவிகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொண்டு, அரசு பணத்தை கொள்ளையடிப்பது. இவ்வாறு செயல்படக்கூடாது” என்றார். பாரிவேந்தரின் இந்த பேச்சுதான் தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது. அதேசமயம், பாரிவேந்தரின் பேச்சு வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் குடும்ப அரசியல் ஒழிந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.