பாரதியர்கள் பாசக்காரர்கள்! – வெளிநாடுகளில் வாழும் பன்னாட்டவர்கள் மத்தியிலான சர்வதேச ஆய்வின் முடிவு

பாரதியர்கள் பாசக்காரர்கள்! – வெளிநாடுகளில் வாழும் பன்னாட்டவர்கள் மத்தியிலான சர்வதேச ஆய்வின் முடிவு

Share it if you like it

உலகின் குடும்ப பாசக்காரர்கள் பாரதீயர்கள். ஒவ்வொரு பாரதீயனும் பெருமிதம் கொள்வோம்.ஆம்! இந்தியர்கள் பாசக்காரர்கள் தான். சந்தேகம் இல்லை. காரணம் இந்தியர்கள் குடும்பஸ்தர்கள். இந்தியர்கள் பண்பாடு – கலாச்சாரம்- ஆன்மீக நம்பிக்கை சார்ந்து வாழ்பவர்கள். அந்த வரையறை அவர்களை கர்மம்- தர்மம் என்ற கரைகளுக்கு இடையே, குடும்பம் என்னும் அழகிய ஜீவ நதியாக வழி நடத்துகிறது.

பட்ட மேற்படிப்புகள் முடித்து மேல்நிலை பதவி – பொறுப்புக்கள் வகிப்பவர் முதல் பாரதீய அரசாங்கத்தின் ராஜீய ரீதியான பொறுப்புக்களில் இருப்பவர்கள் வரை கல்வித் தகுதி -அரசு- தனியார் -வேலைகள் – தொழில் -வியாபாரம் மதம்- மொழி என்று பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒன்றிணைப்பது குடும்பம் என்ற சங்கிலி. எவ்வளவு படிப்பு- பணம்- ஆடம்பரம் இருந்தாலும் குடும்பம்- குழந்தைகள்- குடும்பத் தேவைகள் என்று வரும்போது எந்த அளவிற்கும் இறங்கி வரும் மனோபாவம் அந்த மேல்தட்டு மக்களிடமும் பரவலாக உண்டு.

.

யாரோ ஒருவரின் மகனுக்கும் – மகளுக்கும் தேவையான கல்லூரி- விடுதி உள்ளிட்டவற்றை தன் குடும்பம் மூலம் விசாரித்து தேவையான ஏற்பாடுகளை உடனிருந்து செய்வதும், முன் பின் தெரியாதவர்கள் கூட மருத்துவ தேவைக்காக இந்தியா வருகிறார்கள் என்றால் பகைநாட்டவனை சார்ந்தவன் என்றாலும் கூட தன் குடும்பத்தாருக்கு சொல்லி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்வதும் வெளிநாடு வாழ் பாரதீயர்களிடம் மட்டுமே காணக்கூடிய தனித்துவம்.

குடும்பத்தின் தேவைக்காக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் உடன் வைத்து பணியாற்றும் போது, தன் தேவைகள் அனைத்தையும் மறந்து, பிள்ளைகளின் தேவை- குடும்ப செலவு முடிந்த வரையில் சேமிப்பு ஊரில் இருக்கும் பெற்றோரின் பராமரிப்பு என்று வாழ்நாள் முழுவதும் , குடும்பத் தேவைக்காகவே வாழும் பாரதீயர்களை நீங்கள் திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க முடியும். திருமணம் ஆகாத ஆண்- பெண் தொடங்கி, திருமணமான ஆண்- பெண் வரையில் ஒருவர் மட்டுமே போய் பணிபுரியக்கூடிய சூழலில் இருப்பவர்களின் நிலை இன்னும் நெகிழச் செய்யும்.

மனைவி குழந்தைகளோடு வாரம் ஒரு முறை மட்டுமே தொலைபேசியில் பேசமுடிந்த காலகட்டத்தில் அந்த வார விடுமுறைக்காக தவமிருந்து கணவன்- மனைவியர் இருந்தனர். இன்று தொழில்நுட்பம் பரவலான பிறகு அவர்களின் முதல் தேவை வாட்ஸ் அப் – வீடியோ கால்- வசதியோடு கூடிய அலைபேசி வாங்குவது மட்டுமே. அந்த வகையில் அவர்கள் அதை செலவாகவே பார்ப்பதில்லை தன் குடும்பத்தை குழந்தைகளை தினமும் பார்ப்பதற்கு உகந்த ஒரு வரமாகவே பார்க்கிறார்கள்.

ஊருக்குப் போகும் நண்பர் மற்றும் ஊர் காரரிடம் குழந்தைகள் குடும்பத்திற்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து வாங்கி பெட்டியில் அடைத்துக் கொடுத்தனுப்புவதில், தெரிந்து கொள்ளலாம் அவர்களின் அன்பையும் அக்கறையையும். அப்படி கொடுக்கும் நண்பர்களின் பைகளை எடுத்துச் செல்வதற்கு தோதாக கூடுமான வரையில் தன்னுடைய தேவையில்லாத எடைபளுவை குறைத்து நண்பர்களுக்காக ஊர் காரர்களுக்காக அவர்களின் குடும்பத்திற்கு கூரியர் சேவை பார்க்கும் பெருந்தன்மை வெளிநாடு வாழ் பணியாளர்களுக்கு கூடுதல் தகுதி என்றே சொல்லலாம்.

உள்நாட்டில் தினக்கூலிகளாகவும் – குறைந்த ஊதியத்திலும் குழந்தைகளின் கல்வி- குடும்பத்தின் பராமரிப்பு உள்ளிட்டவற்றை செய்ய முடியாத விரக்தியில், வெளிநாடு போய் வேலை பார்த்து நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குடும்பத்தை முடிந்த வரையில் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் வெளிநாட்டிற்கு வருவதும் ,வந்தபின் உழைத்த பணத்தை மாதாமாதம் வீட்டிற்கு அனுப்பி வைத்து அவர்கள் விரும்பிய உணவு- உடை என்று வசதியாக வாழ்வதை அன்றாடம் பார்த்து- கேட்டு தெரிந்து கொண்டாலும் கூட நம் குழந்தைக்கு நம் ஒரு வாய் சோறு ஊட்ட முடியவில்லை ..நம் குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்க முடியவில்லை. மனைவி- குடும்பம் என்று சந்தோஷமாக வாழ முடியவில்லை. என்ற ஏக்கத்தை மனதில் வைத்து கண்களில் வழியும் தாரையை துடைத்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டு போகும் பாரதீயர்களை பார்க்க முடியும்.

அரபு நாடுகளில் கட்டுமானம்- போக்குவரத்து -துப்புரவு பணியாளர்களாக குறைந்த ஊதியத்தில் வந்து சேர்ந்து, இரண்டு வேளை பணி செய்யும் இடத்தில் உணவு- எஞ்சிய ஒரு வேளை உணவை கூட ஒரு ரியாலில் கிடைக்கும் குபூஸ் என்னும் அடர் சப்பாத்தியை வாங்கி உண்பதும், வாரம் ஒரு நாள் விடுமுறையில் கூட ஒய்வின்றி பெரும் வணிக வளாகங்கள்- பொழுதுபோக்கு அரங்கத்தின் வெளியே நின்று ,வரும் கார்களை கழுவி – துடைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தங்களின் செலவை பார்த்துக் கொண்டு, சம்பளப் பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி வைக்கும் பாரதீயர்கள்ர்களை நீங்கள் பார்க்க முடியும் .

வீடுகளில் பணிப்பெண்ணாக வருபவர்கள் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கூட வேறு ஏதாவது செய்து கூடுதலாக சம்பாதிக்க முடியுமா? என்று முயற்சி செய்யும் ஆண் பெண்களும் உண்டு. அப்படி கிடைக்கும் கூடுதல் வருமானத்தில் ஒரு பங்கை தன் மகளின் பெயரைச் சொல்லி சேமித்து வைத்து தங்கமாக- வெள்ளியாக ஏதாவது வாங்க முடியுமா? என்று நம்மவர்களிடம் கொடுத்து வாங்கும் தாய் -தந்தையரை இன்றளவும் பார்க்க முடியும்.

உடன்பிறந்தவர்களின் திருமணத்திற்கு கூட நாம், போய் வந்தால் எவ்வளவு செலவாகும்? நாம் போகாமல் அந்த பணத்தை மட்டும் அனுப்பி வைத்தால் அது குடும்பத்திற்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்? என்று நினைத்து ,கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அதனால் நான் வரவில்லை. நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பணத்தை அனுப்பிவிட்டு திருமணம் முடிந்த பிறகு வரும் வீடியோவிற்காகவும் போட்டோவிற்காகவும் காத்திருந்து கண்ணீர் வடிக்கும் சகோதரர்களை நீங்கள் வெளிநாடுகளில் பார்க்க முடியும். அவர்கள் இங்கு வந்து இறங்கும் போது விதவிதமாக பிஸ்கட்- சாக்லேட் -வாசனை திரவியங்களோடு வருவதை பார்க்க முடியும் .ஆனால் அத்தனைக்கும் பின் அவர்கள் ஒருவேளை கூட வயிறார உண்ணாமல், வாரம் ஒரு நாள் கூட ருசிக்கு உண்ணாமல் வாழும் தியாக வாழ்வு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு இருப்பவர்களின் பார்வையில் அவர்கள் வெளிநாடுகளில் வாசம் செய்வதாக இருக்கலாம். ஆனால் விமானங்களில் பயணம் செய்யும்போது கூட கைகளில் உணவுப் பொட்டலம் கொண்டு வந்து உண்டு விட்டு விமானத்தில் கொடுக்கும் நல்ல உணவு வகைகளை அப்படியே பார்சல் செய்து கொண்டு வருவதும், விமான நிலையத்தில் தன்னை அழைத்துப் போக வந்திருக்கும் குழந்தைகள்- குடும்பத்தாருக்கு அதை கொடுத்து சாப்பிட வைத்து பார்க்கும் குடும்ப பாசமும் -அன்பும் உலகில் பாரதீயர்கள் தவிர வேறு ஒருவருக்கும் வாய்க்காத வரம் என்றே சொல்லலாம்.

இந்தக் குடும்ப வாழ்க்கை என்ற வரையறையும், பந்த பாசம் என்ற உணர்வும் இருக்கும் வரையில் பாரதீயனை வெல்லும் சக்தி இந்த உலகில் இல்லை. இனியும் வரப் போவதில்லை. இந்த உணர்வுகளும் இதற்கெல்லாம் காரணமான நம்முடைய ஆன்மீக உணர்வும் தான் இன்று உலகின் குருவாக நம்மையும் நம் தேசத்தையும் உயர்த்தி நிற்கிறது என்றால் அது மிகையல்ல. குடும்பமே பள்ளி என்ற வகுப்பறையை வாழ்நாள் முழுவதும் நமக்கு வழங்கும் பல்கலைக்கழகமே ஹிந்துஸ்தானத்தின் தர்மம் . அந்த தர்மத்தின் வழியில் வாழும் வரை பாரதீயர்கள் இந்த உலகில் வெல்ல முடியாத சக்திகளே.


Share it if you like it