ஜெர்மன் பத்திரிகை கார்ட்டூன்… கொந்தளிக்கும் இந்தியர்கள்!

ஜெர்மன் பத்திரிகை கார்ட்டூன்… கொந்தளிக்கும் இந்தியர்கள்!

Share it if you like it

இந்தியா மக்கள்தொகையில் முதலிடம் பிடிக்கும் என்று ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இதை வைத்து இந்தியாவை கேலி செய்யும் வகையில், ஜெர்மன் நாட்டின் பிரபல வார இதழ் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

2023-ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில், இந்தியாவின் மக்கள்தொகை நிகழாண்டு மத்தியில் 1.4286 (142 கோடியே 86 லட்சம்) பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், சீனாவின் மக்கள்தொகை 1.4257 (142 கோடியே 57 லட்சம்) பில்லியனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 340 மில்லியன் (34 கோடி) மக்கள்தொகையுடன் அமெரிக்கா 3-வது இடத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல வார இதலான டெர் ஸ்பீகல் ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது. அக்கார்ட்டூனில், 2 ரயில்கள் அருகருகே செல்கின்றன. ஒரு ரயிலில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியபடி ரயிலுக்குள்ளும், ரயிலின் மேற்கூரையிலும் மக்கள் நின்றபடி பயணிக்கின்றனர். மற்றொரு ரயிலில் சீனாவின் அதி நவீன புல்லட் ரயிலை 2 டிரைவர்கள் இயக்குவதுபோல இருக்கிறது. இதில், இந்தியர்களால் நிரம்பி வழியும் ரயில், சீனாவின் புல்லட் ரயிலை ஓவர்டேக் செய்வதுபோல கார்ட்டூனின் மையப்பொருள் அமைந்திருக்கிறது.

அதாவது, இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தை காட்டுவதுபோல அக்கார்ட்டூன் இருந்தாலும், மற்றொருபுறம் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா இன்னும் வளர்ச்சி அடையாத பழமையான நாடாக இருப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மனி பத்திரிகையின் இக்கார்ட்டூனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜெர்மனி இது மூர்க்கத்தனமான இனவெறி. இப்படி, இந்தியாவை கேலி செய்வது கள நிலவரத்திற்கு ஒத்திருக்கவில்லை. சொந்த பயனுக்காக இந்தியாவை சிறுமைப்படுத்தி சீனாவை உயர்த்திக் காட்டுவதே இதன் நோக்கம்” என சாடியிருக்கிறார். அதேபோல, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “டெர் ஸ்பீகலின் அன்புள்ள கார்ட்டூனிஸ்ட். இந்தியாவை கேலி செய்யும் உங்கள் முயற்சி எப்படி இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவுக்கு எதிராக பந்தயம் கட்டுவது புத்திசாலித்தனம் அல்ல. இன்னும் சில வருடங்களில் ஜெர்மனியை விட இந்தியாவின் பொருளாதாரம் பெரியதாக இருக்கும்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.


Share it if you like it