மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்கும் பொருட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விஷம் வைத்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில், விண்ணில் தொடங்கி கடலின் ஆழம் வரை சென்று பல்வேறு ஆய்வுகளை பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அடிப்படைவாதிகளும், ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களும் பெண்களை அடிமைப்படுத்தவே விரும்புகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இன்றுவரை பெண்களை அடிமைப்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுக்கும் பொருட்டு ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விஷம் வைத்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து, சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்னவெனில், “ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பகுதி கோம். இந்த, பகுதியை சேர்ந்த மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் என பல்வேறு கொடுமைகளை அந்த மாணவிகள் அனுபவித்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில், மாணவிகளின் மருத்துவப் பரிசோதனை முடிவின் அறிக்கையும் வெளி வந்துள்ளது. அதில், அவர்கள் உடலில் நஞ்சு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை, அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, கோம் பகுதியை சேர்ந்த அடிப்படைவாதிகள், மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்கும் வகையில் விஷம் வைத்து இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.