தீவிரமடையும் ஹிஜாப் போராட்டம்: 75 பேர் பலி!

தீவிரமடையும் ஹிஜாப் போராட்டம்: 75 பேர் பலி!

Share it if you like it

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 75-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரான் 1979-ம் ஆண்டு இஸ்லாமிய நாடான பிறகு, அங்கு பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும். அதுவும் முகம், தலைமுடி ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும். மேலும், தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் புர்கா (கறுப்பு அங்கி) அணிய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வருகிறது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண் விடுதலைப் போராளிகள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்களை ஈரான் அரசு அடக்கி, ஒடுக்கி வருகிறது. தவிர, ஹிஜாப், புர்கா அணிவது, இஸ்லாமிய மத சட்டங்கள், நம்பிக்கைகளை பெண்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க, சிறப்பு போலீஸ் பிரிவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பெண்களை, வழிமறித்து சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குர்திஸ்தானைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், தனது குடும்பத்தினருடன் தலைநகர் தெஹ்ரானுக்கு காரில் வந்திருக்கிறார். அப்போது, கண்காணிப்பு சிறப்பு போலீஸார், மாஷா அமினி குடும்பத்தினர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். இதில், மாஷா அமினி முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வரமறுத்த மாஷாவை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கும் தாக்கி இருக்கிறார்கள். இதில் கோமா நிலைக்குச் சென்ற மாஷா அமினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஈரான் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாஷா அமினி இறுதிச் சடங்கு நடந்தபோது, அவரது குடும்பத்தினர் இஸ்லாமிய நடைமுறைகளை கடைப்பிடிக்க மறுத்து விட்டனர். மேலும், குர்திஸ்தான் நகரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள், ஹிஜாப்பை கழற்றி வீசி, இனி ஹிஜாப் அணியமாட்டோம் என்று கோஷமிட்டனர். மறுநாள் இப்போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீவைத்துக் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமுடி இருந்தால்தானே ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்லி, தலைமுடியை நறுக்கி எறிந்தனர். பெண்களுக்கு ஆதரவாக ஈரான் நாட்டு ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கலைக்க போலீஸார், தடியடி, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கு ஆங்காங்கே தீவைக்கப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்போராட்டம் நடந்து வரும் நிலையில், போலீஸார் நடத்திய தாக்குதலில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அந்நாட்டு அதிபரை ‘சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி ஆட்சிக்கு சாவுமணி அடிப்போம்’ என்று போராட்டக்காரர்கள் கோஷமிடத் துவங்கி இருக்கிறார்கள்.


Share it if you like it