ஹிஜாப்: சிறுமி சுட்டுக்கொலை… உடலை திருடிச் சென்ற போலீஸ்!

ஹிஜாப்: சிறுமி சுட்டுக்கொலை… உடலை திருடிச் சென்ற போலீஸ்!

Share it if you like it

ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் இரு சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கும் விவகாரம் அந்நாட்டு அரசுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதை கண்காணிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முறையாக ஹிஜாப் அணியாத பெண்களை இந்த சிறப்பு போலீஸார் தாக்குவதும், சிறையில் அடைப்பதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் உறவினரை சந்திக்க கடந்த மாதம் 13-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, அவர்களது காரை வழிமறித்த சிறப்புப் படை போலீஸார், மாஷா முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி, கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது, மாஷா அமினியை போலீஸார் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில், தலையில் பலத்த காயமடைந்த மாஷா, கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் இந்த மரணம்தான் ஈரானில் மிகப்பெரிய போராட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது.

மாஷாவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது குர்திஸ்தானில் தொடங்கிய இப்போராட்டம் தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் அமளிதுமளி பட்டு வருகிறது. ஈரானிய பெண்கள் ஹிஜாப்பை கழட்டி எரிந்தும், தீவைத்து கொளுத்தியும் வருகின்றனர். மேலும், ஹிஜாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தங்களது தலைமுடியைக் கத்தரித்து வருகின்றனர். நாடு முழுவதும் வெடித்திருக்கும் இப்போராட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாமல் திணறி வருகிறது ஈரான் அரசு. காரணம், இப்போராட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் என்று பாரபட்சமின்றி அனைத்து மாணவிகளும் கலந்துகொண்டிருப்பதுதான். மேலும், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதில், ஹைலைட் என்னவென்றால், சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கு போலீஸாரும் ஆதரவு தெரிவித்திருப்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க, ஹிஜாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஏராளமான ஈரானிய பெண்கள், வெளியில் செல்லும்போது ஹிஜாப் அணியாமல் சென்று வருகின்றனர். இதுபோன்றவர்களை சிறப்பு போலீஸார் கைது செய்து எவின் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த சிறையானது அரசை எதிர்க்கும் போராட்டக்காரர்களை அடைக்கும் மிகக் கொடூரமான சிறையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறையில் பெண்களை அடைத்திருப்பது அந்நாட்டு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஹிஜாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, மாணவி நிகா ஷகராமி ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு சென்றிருக்கிறார். உடனே, அந்த மாணவியை சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அப்போது, மாஷா அமினியைத் தாக்கியதுபோலவே, நிகாவையும் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில் நிகா ஷகராமி உயிரிழந்து விட்டார். பின்னர், நிகாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், தகவலறிந்து ஏராளமான பெண்கள் கூடிவிட்டனர். இதனால் உஷாரான போலீஸார், மாஷா அமினி அடக்கம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட போராட்டம் போல, தற்போதும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதால், நிகாவின் உடலை திருடிச் சென்று, யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்து விட்டனர். இந்த சூழலில், ஷரினா எஸ்மாயில்சாதே என்கிற 16 வயது சிறுமியை போலீஸார் சுட்டுக் கொன்றிருக்கும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷரினாவும் பள்ளி மாணவிதான். மிகவும் திறமைசாலியானவர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் ஈரானில் மீண்டும் பதட்டத்தை அதிகரித்திருக்கிறது.


Share it if you like it