நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன. ஆனாலும் பாஜக அசுர பலம் கொண்டு நாளுக்குநாள் வளர்ந்து கொண்டுதான் செல்கிறது. பல கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக தன்னுடைய பிரச்சாரத்தை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் நடந்த அண்ணாமலையின் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பாரத பிரதமர் பேசினார். பின்னர் நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார். மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜகவினர் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த சுவரொட்டியில் வளர்ச்சி அரசியலா ? வாரிசு அரசியலா ? தாமரையே விடை என குறிப்பிட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது.